உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கோவிட்-19 தொற்றால் இதுவரை ஒரு லட்சத்து 90 ஆயிரத்து 785 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தொற்றால் வெளிநாடு வாழ் இந்தியர்களும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துவருகின்றனர். குறிப்பாக, அமெரிக்க வாழ் இந்தியர்கள் 40-க்கும் மேற்பட்டோர் இந்த வைரசால் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 22ஆம் தேதிவரை கிடைத்த தகவலின்படி, சவுதி அரேபியாவில் 11 இந்தியர்கள் கோவிட்-19 தொற்றால் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டில் உள்ள இந்தியத் தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், மதீனாவில் நான்கு பேரும், மெக்காவில் மூன்று பேரும், ஜெத்தாவில் இரண்டு பேரும், ரியாத், தம்மில் தலா ஒருவரும் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில், அமைதியாக இருக்க வேண்டும் என்றும் மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தக்கூடிய வதந்திகள் பரப்புவதைத் தவிர்க்கவும் இந்தியத் தூதரகம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
இந்தியப் பிரதமர் மோடி கூறியதைப்போல இத்தொற்று சாதி, மதம், இனம், மொழி ஆகியவற்றைப் பார்த்தெல்லாம் பரவாது. இத்தொற்றை எதிர்த்துப் போராட ஒற்றுமையும், சுகோதரத்துவமும் நமது பதிலாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்குள்ள இந்தியர்களுக்குத் தேவைப்படும் உணவு, மருந்துகள், பிற அவசர உதவிகள் முழு வீச்சில் வழங்கப்பட்டுவருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவில் இதுவரை 13 ஆயிரத்து 930 பேர் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1,295 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 121 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: கோவிட்-19 : இரண்டாம் அலைக்குத் தயாராகும் தென் கொரியா !