அமெரிக்காவுக்கு எதிராக ராணுவ ரகசியங்களை வெளியிட்டதன் மூலம் பிரபலம் அடைந்தவர் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே. இவரை கைது செய்ய அமெரிக்கா தீவிரம் காட்டியது.
இந்த நிலையில் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த இரண்டு பெண்கள் அவர் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.
இதையடுத்து அவரை கைது செய்ய, ஸ்வீடன் அரசு தீவிரம் காட்டியது. ஸ்வீடன் தன்னை கடத்த திட்டமிடுகிறது என்று குற்றஞ்சாட்டிய அசாஞ்சே, வேறு வழியின்றி லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் புகலிடம் அடைந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அசாஞ்சே தலைமறைவு வாழ்க்கை வாழ்கிறார். அவர் மீண்டும் ஸ்வீடனுக்குள் வந்தால் கைது செய்யப்படுவார் என்று எச்சரித்து இருந்தது.
இந்த நிலையில் அசாஞ்சே, ஈக்வடார் தூதரகத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். இதையடுத்து அவர் மீதான பாலியல் வழக்கை ஸ்வீடன் மீண்டும் தூசி தட்டியது. இது தொடர்பாக ஸ்வீடன் அரசு, அசாஞ்சே மீதான பாலியல் வல்லுறவு வழக்கில் முகாந்திரம் உள்ளது. அவர் மீதான விசாரணை தவறில்லை என்று தெரிவித்து இருந்தது. மேலும் அவர் குற்றமற்றவர் என்பதை நிருபிக்க அவருக்கு மீண்டுமொரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்து இருந்தது.
தற்போது அவர் மீது மேலும் சில குற்றச்சாட்டுகளும் பதியப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று வெஸ்ட்மினிஸ்டர்ஸ் மாஜிஸ்திரேட் (Westminster Magistrates) நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அசாஞ்சே, தாடி, மீசை இல்லாமல் தோன்றினார். நீல நிற கோர்ட்டும் அணிந்திருந்தார். அவரின் ஆதரவாளர்களும் அந்தப் பகுதியில் கூடியிருந்தனர்.
நீதிமன்றத்தில் தன் மீதான குற்றச்சாட்டுகளை அசாஞ்சே மறுப்பு தெரிவித்ததாகத் தகவல்கள் கூறுகின்றன. அசாஞ்சே வழக்குரைஞர் மார்க் சம்மர்ஸ் கூறும்போது, “ஒரு பத்திரிகையாளருக்கு எதிராக குற்றச்சாட்டுகளை ஆதாரமின்றி தாக்கல் செய்யப்படுவதால் அதிக நேரம் தேவைப்படுகிறது.
அவரின் உயிருக்கும் ஆபத்து உள்ளது. அவர் ஈக்வடார் தூதரகத்தில் ஆதரவு கோரியபோது அவரை அமெரிக்கா உளவு பார்த்தது” என்றார்.
அமெரிக்காவின் ராணுவ ரகசியங்களை வெளியிட்ட பின்னர், அசாஞ்சே பல இன்னல்களைச் சந்தித்தார். அதன் பின்னர் தொடர்ச்சியாக அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது. அதன் விவரம்:
- 2010 ஆகஸ்ட் மாதம், ஸ்வீடனைச் சேர்ந்த இரண்டு பெண்கள் அவர் மீது பாலியல் புகார் அளித்தனர். அதேஆண்டு டிசம்பரில் அவர் லண்டனில் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து இருமுறை பிணையில் வெளியே வந்தார்.
- 2012 லண்டன் ஈக்வடார் தூதரகத்தில் அசாஞ்சே தஞ்சம் கோரினார்.
- 2015 ஆம் ஆண்டு பாலியல் குற்றச்சாட்டிலிருந்து விடுவிப்பு.
- 2018 ஈக்வடார் தூதரகத்தில் புதிய விதிகள் அமலுக்கு வந்தது.
- 2019 ஆம் ஆண்டு அசாஞ்சேவுக்கு ஆஸ்திரேலியா புதிய கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) வழங்கியது. அதே ஆண்டு நீதிமன்றத்தில் சரணடையாத நிலையில் ஏப்ரல் மாதம் லண்டன் காவல் துறை கைது செய்தது.
தற்போது அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: அசாஞ்சேவின் கைது பத்திரிகை சுகந்திரத்துக்கு இருண்ட தருணம்: எட்வர்டு ஸ்னோடன் கருத்து!