ஹைதராபாத் : உலக இளைஞர் திறன் தினமான இன்று உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் கட்டுரை மற்றும் விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்படும்.
இளைஞர்கள் சக்தி மாபெரும் சக்தி. அந்தச் சக்தியை முறையாக பயன்படுத்தி நாட்டை வளர்ச்சி பாதைக்கு அழைத்துச் செல்ல ஒவ்வொரு நாடுகளும் உறுதிமொழியேற்கும்.
உலக இளைஞர் திறன் தினம் வரலாறு
2014 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் சபை ஜூலை 15ஆம் தேதியை உலக இளைஞர் திறன் தினமாக அறிவித்தது. இளைஞர்களை வேலைவாய்ப்பு, நன்நடத்தை மற்றும் தொழில்முனைவோராக மாற்ற இது உத்வேகம் அளிக்கிறது.
இது கல்வி மற்றும் தொழில் வாய்ப்பை அனைத்து நாடுகளுக்கும் வழங்க திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டை போல் இந்தாண்டு கோவிட் பரவல்கள் இருப்பதால் உலக இளைஞர் திறன் தினம் 2021ம் ஒரு சவாலான சூழலில் நடைபெற உள்ளது. கோவிட் பரவல் காரணமாக, கடந்த இரு ஆண்டுகளில் மட்டும் 30 வாரங்களுக்கும் மேலாக பள்ளிகள் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ மூடப்பட்டுள்ளன.
பள்ளிகள் மூடல்
ஜூன் பிற்பகுதியில், 19 நாடுகளில் இன்னும் முழு பள்ளி மூடல்கள் காணப்படுகின்றன. இது கிட்டத்தட்ட 157 மில்லியன் (15 கோடியே 70 லட்சம்) கல்வி கற்போரை பாதித்தது. பகுதி நேர பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் 76 கோடியே 80 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளர். தொழிற்கல்வியில் இந்த நிலை தொடர்கிறது.
உலகளவில் இளைஞர்களின் வேலைவாய்ப்பு 2020 ஆம் ஆண்டில் 8.7 சதவிகிதம் வீழ்ச்சியடைந்துள்ளது. குறிப்பாக, நடுத்தர வருமான நாடுகளில் மிகவும் வெளிப்படையான வீழ்ச்சி காணப்படுகிறது. இளைஞர்களின் ஆரம்பகால அனுபவங்களான இந்த இடையூறின் விளைவுகள் பல ஆண்டுகளாக நீடிக்கும்.
தேசிய திறன் முகமை
ஆக நாம் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும், எந்தப் பணியாக இருந்தாலும் அந்தப் பணிக்கு தேவையான அனைத்து திறன்களையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். இந்தியாவை பொறுத்தவரை தேசிய திறன் மேம்பாட்டு முகமை 2015ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
இது ஒரு தன்னாட்சி அமைப்பாக செயல்படுகிறது. இதன்மூலம் இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படிப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : கல்விக் கண் திறந்த காமராஜர்.. வாழ்வும்- வரலாறும்!