பணக்கார நாடுகள், மற்ற ஏழை நாடுகளுக்காக குறைந்தபட்சம் ஒரு கோடி தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்குமாறு உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் வேண்டுகோள்விடுத்துள்ளார்.
இது குறித்து பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம், "அனைத்து நாடுகளுக்கும் தடுப்பூசியை வழங்கும் ஐநாவின் திட்டத்தில், விநியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சுமார் 20 நாடுகளுக்கு முதல்கட்ட தடுப்பூசி அனுப்புவதே கால தாமதமாகியுள்ளது. தடுப்பூசி விநியோகிப்பவர்கள் தங்களது உற்பத்தியை அதிகரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அப்போதுதான், ஏழை நாடுகளுக்கு கரோனா தடுப்பூசி விரைவாக வழங்கிட முடியும்.
வரவிருக்கும் மாதங்களில் இன்னும் பல நூறு மில்லியன் தடுப்பூசிகள் தேவைப்படும். பணக்கார நாடுகள், மற்ற ஏழை நாடுகளுக்காகக் குறைந்தபட்சம் ஒரு கோடி தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்க வேண்டும்.
அப்போதுதான், 2021ஆம் ஆண்டில் முதல் 100 நாள்களுக்குள் அனைத்து நாடுகளுக்கும் கரோனா தடுப்பூசி அனுப்பும் ஐநாவின் திட்டம் நிறைவேறும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கோவிட்-19 மையமாக மாறிய பிரேசில்: ஒரேநாளில் 3,000-க்கும் மேல் உயிரிழப்பு