டெல்லி: இந்தியாவில் பரவலாக கரோனா தொற்று தடுப்பூசியாக கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகியவை செலுத்தப்படுகின்றன. ரஷ்யாவின் ஸ்பூட்னிக் தடுப்பூசியும் இந்தியாவில் பயன்படுத்தப்பட்டுவருகிறது.
குறிப்பாக, இந்தியாவின் சீரம் நிறுவனம் - பிரிட்டனின் ஆக்ஸ்போர்ட் அஸ்ட்ராஜெனிகா நிறுவனம் இணைந்து கோவிஷீல்டு தடுப்பூசியை தயாரித்து வருகிறது. இதையடுத்து, அமெரிக்காவில் பயன்படுத்தப்பட்டு வந்த நோவாவாக்ஸ் தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்கும் உரிமையை சீரம் நிறுவனம் பெற்றது. அந்த தடுப்பூசிக்கு 'கோவோவாக்ஸ்' என்ற பெயரில் சீரம் நிறுவனம் தயாரித்து வந்தது.
இதற்கும் இரண்டு டோஸ்கள்
இந்நிலையில், கோவோவாக்ஸ் தடுப்பூசிக்கு அவசர கால பயன்பாட்டுக்கான அனுமதியை உலக சுகாதார அமைப்பு நேற்று (டிசம்பர் 17) வழங்கியுள்ளது. கோவோவாக்ஸ் தடுப்பூசிக்கு அனுமதி அளித்ததன் மூலம், பெருமளவில் பொருளாதர வலு இல்லாமல் இருக்கும் நாடுகளில் உள்ள மக்களுக்கு தடுப்பூசி போடும் தொடர் செயல்பாட்டுக்கு இது பெரிய ஊக்கமாக இருக்கும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும், பொருளாதார வலு இல்லாத 41 நாடுகள், தங்களின் 10 விழுக்காடு மக்கள் தொகையினருக்குக் கூட தடுப்பூசி செலுத்த முடியாத நிலையில் உள்ளது என்றும் 98 நாடுகளில் இன்னும் 40 விழுக்காடு மக்கள் தொகையினருக்கு மேல் தாண்டவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
கோவோவாக்ஸ் தடுப்பூசியையும் இரண்டு தவணைகளாக (Dose) செலுத்த வேண்டும் எனவும் அவை, இரண்டு முதல் எட்டு டிகிரி செல்சியஸில் பதப்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஒமைக்ரான்: குழந்தைகளுக்கு எப்போது தடுப்பூசி?