உக்ரைனில் அதிபர் தேர்தல் நடைபெற்றுவருகிறது. இதில் தற்போதைய அதிபரான பெட்ரோ போரோஷென்கோவும் - தொலைக்காட்சி நடிகரும், நகைச்சுவையாளருமான வோல்டோமைர் ஸெலன்ஸ்கையும் பங்கேற்கிறார்கள்.
தொலைக்காட்சி நடிகரான வோல்டோமைர் ஸெலன்ஸ்கை நடித்த "சர்வன்ட் ஆப் பீப்பிள்" தொடரில், ஒரு பள்ளி ஆசிரியராக தோன்றி பின் அரசியலுக்குள் நுழைந்து முதல்வன் அர்ஜூன் பாணியில், உக்ரைனின் அதிபர் ஆகும் கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றார்.
இந்தப் புகழைக் கொண்டு நிஜத்திலும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தார். ஒரு நகைச்சுவையாளர் அதிபர் வேட்பாளராக களமிறங்குவது அந்நாட்டில் இதுவே முதன்முறை என்பதால் பலரின் கவனத்தையும் இந்தத் தேர்தல் ஈர்த்துள்ளது.
இரண்டு கட்டங்களாக நடைபெறும் அந்தத் தேர்தலின், முதல்கட்ட வாக்குப்பதிவு கடந்த மார்ச் 31ஆம் தேதி நடைபெற்று ஏப்ரல் 1ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டன. இதன்படி 30 விழுக்காடு வாக்குகள் ஸெலன்ஸ்கைக்கு ஆதரவாகவும், 16 விழுக்காடு வாக்குகள் அதிபர் போரோஷென்கோவுக்கும் ஆதரவாகவும் பதிவாகியிருந்தன.
இந்நிலையில், இத்தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது.