ஜிஎஸ்கே, சனோஃபி ஆகிய நிறுவனங்கள் இணைந்து உலகிலேயே அதிகப்படியான மருந்து பொருட்களை தயாரிக்கின்றன. இந்நிறுவனங்கள் டிஎன்ஏ தொழில்நுட்பம் சார்ந்து தயாரிக்கவுள்ள தொற்று நோய்க்கான மருந்துகளை 6 கோடி அளவில் பிரிட்டன் அரசு பெறவுள்ளது.
கரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதற்கான பணிகள் உலகெங்கிலும் நடைபெற்று வருகின்றன. ஆனால், எது வெற்றிபெறும் என்பது உறுதியாக தெரியவில்லை. பிரிட்டன் அரசு கரோனா தடுப்பு மருந்துக்காக ஏற்கனவே பல்வேறு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ள நிலையில், இந்த புதிய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பிரிட்டன் வணிகச் செயலர் அலோக் ஷர்மா, எங்கள் விஞ்ஞானிகளும் ஆராய்ச்சியாளர்களும் கரோனா தடுப்பு மருந்துக்கான பணிகளை பாதுகாப்புடன் சிறப்பாக செய்து வருகின்றனர். இது குறிப்பிடத்தக்க செயல்பாடு ஆகும், எனினும் வெற்றிக்கு உத்தரவாதம் ஏதுமில்லை.
ஜிஎஸ்கே, சனோஃபி போல பல்வேறு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளோம். எந்த நிறுவனம் கரோனா தடுப்பு மருந்தை கண்டறியும் என்பது தெரியவில்லை. மருந்து கண்டறியப்பட்டால் மக்கள் உயிரை விரைந்து பாதுகாக்க பயன்படும் என்றார்.
இது குறித்து அரசின் கரோனா தடுப்பு மருந்து செயற்குழு தலைவர் கேட் பிங்காம், கரோனா தடுப்பு மருந்தை கண்டறியும் பணிகளில் ஒவ்வொருவரும் வெவ்வேறு முறையை கையாளுவது சிறப்பான செயல்பாடாகும். நிரந்தர தீர்வு எது என தெரியாத வேளையில், வெவ்வேறு முயற்சிகளை மேற்கொள்வதே சரியானது என தெரிவித்தார்.
பிரிட்டன் தேசிய சுகாதாரத் துறையின் தகவல்படி, தற்போதைய ஒப்பந்தத்தின் வாயிலாக 75 ஆயிரம் நபர்கள் கரோனா தடுப்பு மருந்துக்கான ஆராய்ச்சியில் ஈடுபட பதிவு செய்துள்ளனர். வருகிற அக்டோபர் மாத இறுதிக்குள் 5 லட்சம் நபர்களை இப்பணியில் ஈடுபடச் செய்வதே அரசின் நோக்கமாக உள்ளது.