உலகளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பால் இதுவரை இங்கிலாந்தில் 2 லட்சத்து 15 ஆயிரத்து 260 மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டும், 31 ஆயிரத்து 587 மக்கள் உயிரிழந்துள்ளதாக, அந்நாட்டு சுகாதார நிறுவனம் உறுதிசெய்துள்ளது.
இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளின் வரிசையில், கோவிட்-19 வைரசால் அதிகளவு பாதிப்பை சந்தித்துவரும் நாடாக இங்கிலாந்து, தற்போது மாறியுள்ளது. நாளுக்குநாள் அதிகரித்துவரும் கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து, அந்நாட்டு மக்களை காக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இங்கிலாந்து அரசு மேற்கொண்டுவருகிறது.
இங்கிலாந்து நாட்டில் கோவிட்-19 பரவலால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, ஐயர்லாந்து குடியரசை தவிர, உலகின் எந்தப் பகுதியிலிருந்து அந்நாட்டிற்கு வந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 14 நாள்கள் தனிமைப்படுத்தப்படுவர் என, பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்று தனது தொலைக்காட்சி உரையில் தெரிவித்துள்ளார்.
புதியக் கட்டுப்பாடு, இங்கிலாந்துக்கு வரும் அம்மண்ணின் மக்களுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. வெளிநாடு வாழ் இங்கிலாந்து மக்களும், இடம்பெயர்ந்தோரும், பயணிகளும் தங்களது வீட்டில் கட்டாயமாக தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.
இதனை மீறினால் 1,000 பவுண்டுகள் வரை அபராதம் விதிக்கப்பட வேண்டும் அல்லது விதிகளை மீறியதற்காக நாடு கடத்தப்பட வேண்டும் என அரசு குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதியக் கட்டுப்பாடுகள் மே மாதம் இறுதியில் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து இங்கிலாந்து விமான நிலையங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் விமான நிலைய ஆபரேட்டர்கள் சங்கத்தைச் சேர்ந்த கரேன் டீ கூறுகையில்,“இந்த நடவடிக்கை அறிவியல் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. முக்கியத் துறைகளில் பொருளாதாரத் தாக்கத்தை ஏற்படுத்தும், இந்த நடவடிக்கையைக் கவனத்துடன் கையாள வேண்டும்" என கூறினார்.
இங்கிலாந்து விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் கெல்லி டோல்ஹர்ஸ்ட் இந்த வார இறுதியில் விமான மற்றும் விமான நிலைய பிரதிநிதிகளுடன் ஒரு சந்திப்பை நடத்தி, இந்த கொள்கையை தெளிவுபடுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, அமெரிக்கா, ஆஸ்திரியா, பெல்ஜியம், செக் குடியரசு, டென்மார்க், எஸ்டோனியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், ஹங்கேரி, ஐஸ்லாந்து, இத்தாலி, லாட்வியா, சுவீடன், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுக்கு பயணிக்க இங்கிலாந்து தடை விதித்திருந்தது.
தற்போது, ஐயர்லாந்து குடியரசை தவிர மற்ற அனைத்து நாடுகளுக்கும் இந்தத் தடையை இங்கிலாந்து அரசு நீட்டித்துள்ளது. கரோனா வைரசைக் கட்டுப்படுத்த அரசு தவறிவிட்டதாகப் பல்வேறு அமைப்புகளும் குற்றச்சாட்டுகளை வைத்துவரும் நிலையில், கரோனா வைரஸ் பெருந்தொற்றுநோய் பாதிப்பிலிருந்து காக்கும் தடுப்பூசிக்கான மருத்துவப் பரிசோதனைகளையும், இங்கிலாந்து அரசு முன்னெடுத்து வருவது கவனிக்கத்தக்கது.
இதையும் படிங்க : உலகளவில் 40 லட்சத்தைக் கடந்த கரோனா பாதிப்பு!