அமெரிக்காவின் ஃபைசர் நிறுவனம், ஜெர்மனியின் பயோஎன்டெக் (BioNTech) ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்த கரோனா தடுப்பு மருந்துக்கு உலகிலேயே முதன் நாடாக பிரிட்டன் ஒப்புதல் வழங்கியுள்ளது. அடுத்த வாரம், அந்த மருந்து நாடு முழுவதும் விநியோகிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பிரிட்டன் அரசு வெளியிட்ட அறிக்கையில், "மருந்து மற்றும் சுகாதாரப் பொருள்கள் ஒழுங்குமுறை நிறுவனத்தின் பரிந்துரையை ஏற்று ஃபைசர் மற்றும் பயோஎன்டெக் நிறுவனங்கள் இணைந்து தயாரித்த மருந்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த வாரம் முதல் பிரிட்டன் நாடு முழுவதும் மருந்து விநியோகிக்கப்படும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுகாதாரப் பணியாளர்கள், வயதானவர்கள், மருத்துவ ரீதியில் பலவீனமாக உள்ளவர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு கரோனா தடுப்பூசி வழங்குவது குறித்து பிரிட்டன் நாட்டின் தடுப்பூசி ஆணையம் முடிவுசெய்யும். ஃபைசர் - பயோஎன்டெக், அமெரிக்காவின் மாடர்னா நிறுவனங்கள் தயாரித்த மருந்துகள் 90 விழுக்காட்டிற்கு மேல் பயனளிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு தடுப்பூசிகளும் ஆர்என்ஏ தொழில்நுட்பத்தின் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. கரோனாவுக்கு எதிரான போரில் பிரிட்டன் நாட்டின் இந்த ஒப்புதல் வரலாற்றுச் சிறப்புமிக்கது என ஃபைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பெருந்தொற்று காலத்தில் இயல்புநிலைக்கு மாறாக இந்தத் தடுப்பூசி பெரும் பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரோனா காரணமாக 15 லட்சம் பேர் உயிரிழந்த நிலையில், பொருளாதாரம் பெரும் பாதிப்படைந்தது.