சர்வதேசச் சூழலை கருத்தில் கொண்டும் உலக அளவில் தனது செல்வாக்கை உயர்த்தும் நோக்கிலும் அடுத்த நான்கு ஆண்டுகளில் ராணுவ பட்ஜெட் 16.5 பில்லியன் பவுண்டுகளாக (21.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) உயர்த்தப்படும் என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "பெருந்தொற்று போன்ற ஆபத்தான காலகட்டத்திலும் ராணுவத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச சூழலும் மிகவும் ஆபத்தாக உள்ளது. பனிப்போருக்கு பிறகான காலத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு சூழ்நிலை உள்ளது.
எனவே, வரலாற்றுக்கு உண்மையாக இருக்கும் வகையில், கூட்டு நாடுகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுவோம். பின்வாங்கும் செயல்களை முடிவுக்கு கொண்டுவரும் பொருட்டு பாதுகாப்பு படைகளை சீரமைக்க வேண்டும். உலக அளவில் செல்வாக்கை உயர்த்த வேண்டும். புதிய தொழில்நுட்பத்திற்கு முன்னோடியாக மக்களை பாதுகாக்க நமக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
அடுத்த நான்கு ஆண்டுகளில் ராணுவ பட்ஜெட்டுக்காக கூடுதலாக 16.5 பில்லியன் பவுண்டுகள் ஒதுக்கப்படும். ராணுவத்திற்காக செலவிடுவதை ஆண்டுக்கு ஒரு முறை, 0.5 விழுக்காடு அதிகரிக்க உறுதி பூண்டுள்ளோம். கடந்த நான்கு ஆண்டுகளை, ஒப்பிடுகையில், இது 24.1 பில்லியன் பவுண்டுகள் அதிகமாகும்" என்றார்.