ரஷ்யாவில் உள்ள காகரின் ஆராய்ச்சி மற்றும் சோதனை விண்வெளிப் பயிற்சி மையத்தில் (Gagarin Research & Test Cosmonaut Training Center (GCTC) ) விண்வெளி வீரர்களுக்கான பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது. இந்த மையமானது ஸ்டேட்ஸ்பேஸ் கார்ப்பரேஷன் ரோஸ்கோஸ்மோஸின் துணை நிறுவனமான கிளாவ்கோஸ்மோஸ் (Glavkosmos) கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது.
இங்கு இஸ்ரோவின் முதல் மனித விண்வெளி பயணமான ககன்யானில், பயணிக்கும் நான்கு இந்திய விண்வெளி வீரர்களுக்குப் பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது. ஆனால், கரோனா வைரஸ் காரணமாக விண்வெளி பயிற்சியானது, தற்காலிகமாக சில வாரங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. தற்போது, விண்வெளி வீரர்களுக்கு மீண்டும் பயிற்சி தொடங்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து கிளாவ்கோஸ்மோஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "அனைத்து ஜி.சி.டி.சி வளாகங்களிலும் சுகாதார நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. வீரர்களும் அலுவலர்களும் தகுந்த இடைவெளியைப் பின்பற்றவும், மாஸ்க், கையுறைகள் அணியவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கிளாவ்கோஸ்மோஸ், இஸ்ரோ இடையேயான ஒப்பந்தத்தின் அடிப்படையில் நான்கு விண்வெளி வீரர்களுக்கு, சுமார் 12 மாதங்கள் பயிற்சியளிக்கப்படுகிறது.
தற்போது, பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் மையம் செயல்பாட்டுக்கு வந்ததைத் தொடர்ந்து, இந்திய வீரர்களுக்கான பயிற்சி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது" எனக் குறிப்பிட்டிருந்தனர்.
இதையும் படிங்க: ஆம்பன் புயலால் 19 மில்லியன் குழந்தைகள் பாதிப்பு: யுனிசெஃப்