2012ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் "டிங்கர் டெய்லர் சோல்ஜர் ஸ்பை" (Tinker Tailor Soldier Spy). 1970களில் நடைபெற்ற பனிப்போரை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்த இத்திரைப்படம் பல்வேறு விருதுகளை வாங்கி குவித்தது.
இத்திரைப்படம் அதே பெயரில் வெளியான ஒரு நாவலை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது. ஜான் லு கேரே என்பவர் எழுதியுள்ள இந்த நாவல் சர்வதேச அளவில் புகழ்பெற்றது.
ஜான் லு கேரே பிரிட்டனில் உளவாளியாகப் பணியாற்றியவர். அங்கு அவருக்கு கிடைத்து அனுபவங்களைக் கொண்டு அவர் பல்வேறு த்ரில்லர் நாவல்களை எழுதியுள்ளார். இந்நிலையில், இவர் தனது 89 வயதில் உயிரிழந்துள்ளதாக பிரிட்டன் நாட்டின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதை ஜான் லு கேரே குடும்பத்தினரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இது குறித்து ஜான் லு கேரேவின் இலக்கிய நிறுவனமான கர்டிஸ் பிரவுன் குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த டிசம்பர் 12ஆம் தேதி சனிக்கிழமை மாலை நிமோனியாவால் பாதிக்கப்பட்டிருந்த ஜான் லு கேரே காலமானார். அவரது மரணம் கரோனா தொடர்புடையது அல்ல. அவருக்கு வயது 89.
கடந்த 60 ஆண்டுகளாக அதிகம் விற்பனையான நாவல்கள் பட்டியலில் ஜான் லு கேர் நாவல் தொடர்ந்து இடம் பெற்றன. தனது வாழ்க்கையை எழுத்துக்காக அர்ப்பணித்த அவர், பனிப்போர் காலத்தை புரிந்துகொள்ள பெரிதும் உதவினார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தேவாயலத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் சுட்டுக்கொலை