பிரிட்டன் தனது தனித்துவத்தை காப்பாற்ற வேண்டும் என்று பல தரப்பினரின் கோரிக்கையை ஏற்று ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து அந்நாடு வெளியேற முடிவு எடுத்தது. இதனையடுத்து, பிரதமராக 2016 ஆம் ஆண்டு பதவியேற்ற தெரசா மே, பொது வாக்கெடுப்பு நடத்தினர். இதில் ஆதரவு கிடைக்க பெற்றதையடுத்து பிரெக்ஸிட் தொடர்பான ஒப்பந்தம் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது.
இதுவரை, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமரால் கொண்டு வரப்பட்ட பிரெக்ஸிட் ஒப்பந்தம் இரண்டுமுறை தோல்வியைத் தழுவியது. இதையடுத்து, பிரிக்ஸிட் ஒப்பந்தத்தில் திருத்தம் கொண்டு வராமல் மற்றொரு வாக்கெடுப்பு நடத்த முடியாது என சபாநாயகர் தெரிவித்தார்.
இதற்கிடையே, வரும் 29 தேதி வரை இருந்த பிரிட்டன் வெளியேறுவதற்கான் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என தெரசா மே கோரிக்கை விடுத்திருந்தார். இதனை 27 உறுப்பு நாடுகளும் ஏற்றுகொண்டது.
நாடாளுமன்றத்தில் பிரெக்ஸிட் ஒப்பந்தம் நிறைவேற்றப்படவில்லை என்றால் ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஏப்ரல் 12 ஆம் தேதி பிரிட்டன் வெளியேற நேரிடும். அதே சமயம், பிரெக்ஸிட் நிறைவேற்றப்பட்டால், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான கால அவகாசம் மே 12 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இதுதொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரசா மே கடிதம் எழுதியுள்ளார். அதில்,"தற்போதைக்கு நான்கு தெளிவான வழிகள் உள்ளன. ஒன்று, தான் கொண்டு வரும் பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை நிறைவேற்றுவது. இரண்டு, ஏப்ரல் 12 ஆம் தேதிக்கு முன்னரே கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்பது கேட்பது. அதன் மூலம் ஐரோப்பிய நாடாளுமன்றத்துக்கு நடத்தப்படும் தேர்தலில் பிரிட்டன் பங்கேற்க முடியும். மூன்று, பிரெக்ஸிட்டை ரத்து செய்வது. நான்கு, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து எவ்வித ஒப்பந்தமும் இல்லாமல் வெளியேறுவது" என்று அந்த கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கு நிர்ணயிக்கப்பட்ட மார்ச்-29 ஆம் தேதியை மாற்றம் செய்வது தொடர்பான சட்டம் நிறைவேற்றப்படும் என்றும் அக்கடிதத்தில் அவர் உறுதியளித்துள்ளார். இதற்கிடையே, பிரெக்ஸிட் தொடர்பாக மீண்டும் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனக்கோரி மத்திய லண்டனில் பேரணி நடைபெற்றது.