ஸ்காட்லாந்து நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ள புதிய விதிகளின்படி, ஸ்காட்லாந்து முழுவதும் பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட பொதுக் கட்டடங்கள் அனைத்திலும் சானிடரி நாப்கின்கள் உள்ளிட்ட மாதவிடாய் சம்பந்தப்பட்ட பொருள்கள் இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்றும், மாதவிடாய் சம்பந்தப்பட்ட பொருள்கள் தேவைப்படும் அனைவருக்கும் கிடைக்க வழிவகுப்பது உள்ளூர் அலுவலர்களின் கடமை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த மசோதாவை கடந்த ஆண்டு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்திய உறுப்பினர் மோனிகா லெனான், "இந்தப் பிரச்சாரத்திற்கு தொழிற்சங்கங்கள், பெண்கள் அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் உள்பட ஒரு பரந்தக் கூட்டணி ஆதரவளித்துள்ளது. மாதவிடாய் சம்பந்தப்பட்ட பொருள்களை வழங்கிய கடைசி நாடாக ஸ்காட்லாந்து இருக்காது" என்று தெரிவித்தார்.
ஸ்காட்லாந்து நாட்டின் இந்த முடிவு "மாதவிடாய் பொருள்களை இலவசமாக வழங்க முடியும் என்பதை உலக நாடுகளுக்கு உணர்த்தும் வகையில் உள்ளதாகவும்" அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, "இந்த அற்புதமான சட்டத்திற்கு வாக்களித்ததற்கு தான் பெருமிதம் கொள்வதாகவும், இது பெண்கள், சிறுமிகளுக்கான முக்கியமானக் கொள்கை" என்றும் ஸ்காட்லாந்தின் அமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
பிளான் இன்டர்நேஷனல் பிரிட்டன் - 2017 இன் கணக்கெடுப்பின்படி, இங்கிலாந்து நாட்டில் 10 சிறுமிகளில் ஒருவர் மாதவிடாய் சம்பந்தப்பட்ட பொருள்களை வாங்க முடியாமல் அவதிக்குள்ளாகிறார். மேலும், 14 முதல் 21 வயது நிரம்பியவர்களில் பாதி பேர், மாதவிடாய் காலத்தின் போது அசவுகரியமாக உணர்கிறார்கள் என்றும், இவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் இதன் காரணமாகவே பள்ளிக்கு விடுமுறை எடுக்கின்றனர் என்றும் தெரிய வந்துள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டு, ஸ்காட்லாந்து முழுவதும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் உள்ள மாணவர்கள் மாதவிடாய் சம்பந்தப்பட்ட பொருட்களை இலவசமாகப் பெறலாம் என அந்நாட்டு அரசு முன்னதாக அறிவித்திருந்தது. தொடர்ந்து, 2019 ஆம் ஆண்டில், நூலகங்கள் மற்றும் பொழுதுபோக்கு மையங்களிலும் மாதவிடாய் சம்பந்தப்பட்ட பொருட்களை இலவசமாகப் பெறும் வகையில் அந்நாட்டு அரசு நிதி ஒதுக்கியது குறிப்பிடத்தக்கது.