உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகளவில் உள்ளது. நூற்றுக்கணக்கான மருந்துகள் பரிசோதனை கட்டத்தில் உள்ளன. இருப்பினும், விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு கரோனா தொற்று பரவும் என்ற உறுதியான தகவல் கிடையாது. ஆனால், தற்போது நெதர்லாந்தில் 16 மின்க்ஸ் விலங்குகள் பன்ணையில் கரோனா தொற்று பரவியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில், கரோனா தொற்று மனிதர்களிடமிருந்து மின்க்ஸுக்கும், அதேபோல் இந்த பாலூட்டிகளிலிருந்தும் மக்களுக்குப் பரவக்கூடிய திறன் கொண்டது எனத் தெரியவந்துள்ளது. முதன்முதலாக, மனிதர்களிடமிருந்துதான் மின்க்ஸுக்கு கரோனா தொற்று பரவியுள்ளது. இதுதொடர்பான கூடுதல் ஆராய்ச்சி நடத்தப்படவுள்ளது என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, நெதர்லாந்தில் 2020 ஏப்ரல் பிற்பகுதியில் இரண்டு மிங்க்ஸ் பண்ணைகளில் இந்த வைரஸ் முதன்முதலில் கண்டறியப்பட்டது. ஜூன் மாத இறுதிக்குள், மின்க்ஸ் பண்ணையிலிருந்த 97 பேரில் 66 ஊழியர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. மேலும், விலங்குகளின் மரபணுக்களையும் எடுத்து சோதனையிட்டனர்.
அப்போது, கரோனா பாதிப்புக்குள்ளான மனிதர்களிடம் விலங்குகளின் மரபணுக்கள் இருப்பது உறுதியாகியுள்ளது. இந்தக் கூற்றின் அடிப்படையில், விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு கரோனா பரவுதல் தெரியவந்துள்ளது.