கரோனா வைரஸ் தொற்றுக்கு ரஷ்யாவில் 2 தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டன. ரஷ்ய நேரடி முதலீட்டு நிதி உதவியுடன் ‘ஸ்புட்னிக் வி’ தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது. மற்றொரு தடுப்பூசியை சைபீரியாவில் உள்ள வெக்டர் நிறுவனம் கண்டுபிடித்தது. இரண்டு தடுப்பூசிகளும் இறுதிக்கட்ட பரிசோதனையில் உள்ளன. ‘ஸ்புட்னிக் வி’ தடுப்பூசியை 70 கிளினிக்குகள் மூலம் விநியோகிக்கும் பணியை ரஷ்யா சமீபத்தில் தொடங்கியது.
இதற்கிடையே, மருத்துவ பரிசோதனைகளில் மூத்த நபர்களிடையே எதிர்பார்த்த நோய் எதிர்ப்பு சக்தி இல்லாததால், கரோனா வைரஸ் தடுப்பூசியின் வளர்ச்சி தாமதமாகியுள்ளது என்றும், 2021ஆம் ஆண்டு இறுதியில்தான் தடுப்பூசி கிடைத்திட வாய்ப்புள்ளது எனவும் பிரான்ஸ் தடுப்பூசி நிறவனம் சனோஃபி அறிவித்திருந்தது.
இந்நிலையில் இன்று, ரஷ்ய தடுப்பூசி நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "சனோஃபி மற்றும் ஜி.எஸ்.கே நிறுவனங்கள் அதன் தடுப்பூசியை மேம்படுத்த, எங்களின் தொழில்நுட்பத்தை பகிர தயாராகவுள்ளோம். கரோனா அழித்திட அனைவரும் ஒன்றிணைவதுதான் ஒரே வழி. நாம் ஒன்றாக வலுவாக மாறுவோம்" எனக் குறிப்பிட்டிருந்தனர்.