சீனாவில் கடந்தாண்டு டிசம்பரில் பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் பெருந்தொற்று தற்போது அந்நாட்டில் குறைந்திருந்தாலும், 200க்கும் மேற்பட்ட நாடுகள், பிராந்தியங்களில் வேகமாக பரவிவருகிறது. குறிப்பாக இந்த வைரஸின் தாக்கத்தால் அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், ரஷ்யாவில் நேற்று ஒரேநாளில் புதிதாக 4,774 பேருக்கு கரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 62,773ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம் இத்தொற்றால் நேற்று 42 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதன்மூலம், இறப்பு எண்ணிக்கை 555ஆக உயர்ந்துள்ளது.
இதனிடையே, அந்நாட்டில் இதுவரை 4,891 பேர் இத்தொற்றிலிருந்து முழுவதுமாக குணமடைந்துள்ளனர். உலக நாடுகளை அச்சுறுத்திவரும் இந்த கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் விதமாக ரஷ்யாவில் கடந்த ஏப்ரல் முதல் வாரத்திலிருந்து ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் அத்திவாசிய பொருட்கள், மருந்துகள் ஆகியவற்றை வாங்குவதைத் தவிர வேறு எதற்கும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ரஷ்யாவில் இந்த ஊரடங்கு உத்தரவால், இரண்டாம் உலகப்போரின் 75ஆவது ஆண்டு வெற்றியைக் கொண்டாடும் வகையில் திட்டமிடப்பட்டிருந்த கொண்டாட்டங்கள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: புரட்சியாளர் லெனின் 150: நவீன ரஷ்யாவில் தொடரும் லெனின் மரபு...