ரஷ்யாவின் மாஸ்கோ ஸ்டேட் மெடிக்கல் யுனிவர்சிட்டி, கமாலேயா தேசிய மைக்ரோபயாலஜி ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து வெற்றிகரமாக கரோனா மருந்தை கண்டுபிடித்துள்ளது. இந்த மருந்தின் முதல்கட்ட சோதனை அந்நாட்டின் ராணுவ வீரர்கள் மீது செலுத்தப்பட்டது. பின்னர் இரண்டாம் கட்ட சோதனையும் வெற்றிகரமாக நடைபெற்றதாகவும், மருந்து பெரிய அளவில் பயன் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால், இந்த மருந்தின் மூன்றாம் கட்ட பரிசோதனை முடிவதற்கு முன்பே மக்களின் மீது மருந்தை பரிசோதிக்க போவதாக அந்நாட்டின் பாதுகாப்பு துறை இணையமைச்சர் ரஸ்லன் த்ஸலிகோவ் ட்வீட் செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவிட்-19 தடுப்பூசி மருந்து இரண்டாம் கட்ட பரிசோதனை வெற்றிகரமாக நடைபெற்றது. மருந்து செலுத்தப்பட்ட அனைவருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளது. இந்த தடுப்பூசி மருந்து நோயாளிகள் மீது பயன்படுத்த தயார் நிலையில் இருக்கிறது" எனத் தெரிவித்தார்
இவரின் பேச்சுக்கு பல தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பியது. மூன்றாம் கட்ட பரிசோதனை முடிவதற்கு முன்னரே இவ்வுளவு அவசரப்படுகிறார்கள் என்றும், மக்களின் உயிர்களை விளையாட்டாக நினைக்கிறார்கள் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், பாதுகாப்பு இணையமைச்சரின் கூற்றுக்கு மறுப்பு தெரிவித்து ரஷ்யாவின் சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், "தடுப்பூசியின் சோதனைகள் இன்னும் முடிவடையவில்லை. இரண்டாம் கட்ட சோதனை முடிவுகள் உறுதியான பிறகே மூன்றாம் கட்ட பரிசோதனையின் வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
இந்த ஆண்டு இறுதிக்குள் 200 மில்லியன் டோஸ் கரோனா வைரஸ் தடுப்பூசி மருந்துகள் வெளிநாட்டு நிறுவனங்கள் பங்களிப்புகளுடன் தயாரிக்கமுடியும் என அமைச்சகம் நம்புகிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.