கீவ் (உக்ரைன்): கடந்த ஒரு மாதங்களாக நடந்து வரும் ரஷ்யா-உக்ரைன் போரில் 7 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை ரஷ்யா வீரர்கள் உயிரிழந்திருக்க வாய்ப்பு உள்ளதாக நேட்டோ அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள கடந்த பிப்.24ஆம் தேதி அந்நாட்டு அதிபர் புதின் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதையடுத்து ரஷ்யா-உக்ரைன் இடையே போர் மூண்டது. தற்போது வரை ஒரு மாத காலமாகப் போர் நீடித்து வருகிறது. ரஷ்யாவை போர் நிறுத்தம் செய்யுமாறு பல நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
இதையடுத்து, ரஷ்யா மீது பல்வேறு நாடுகள் பொருளாதாரத்தடை உள்பட கடுமையான தடைகளை விதித்து வருகின்றன. பதிலுக்கு ரஷ்யாவும் தடைகளை விதித்து வருகிறது. ஒரு மாத காலப்போரில் ரஷ்யா - உக்ரைனின் முக்கிய நகரங்களை கைப்பற்றியதாகவும் கூறப்படுகிறது.
போர்ச்சூழலால் உக்ரைனில் சிக்கித்தவிக்கும் அந்நாட்டு மக்கள் உள்பட அனைவரும் வெளியேறி வருகின்றனர். குறிப்பாக உக்ரைனில் இந்திய மாணவர்கள் அதிகமானோர் சிக்கித் தவித்தனர். மருத்துவம், பொறியியல் உள்ளிட்டப்படிப்புகள் படிக்க அங்கு சென்றனர். இதையடுத்து ஒன்றிய, மாநில அரசுகள் மாணவர்களைப் பாதுகாப்பாக மீட்டனர். ஒன்றிய அரசு 'ஆபரேஷன் கங்கா' என்ற திட்டம் தொடங்கப்பட்டு மாணவர்களை மீட்டனர்.
இந்த நிலையில், நேற்று (மார்ச் 23) நேட்டோ அமைப்புத்தகவல் ஒன்றை வெளியிட்டது. அதில் ரஷ்யா-உக்ரைன் போரில் 7 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை ரஷ்யா வீரர்கள் உயிரிழந்திருக்க வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேட்டோ அமைப்பில் உள்ள மூத்த ராணுவ அலுவலர் ஒருவர், இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். உக்ரைன் நாட்டு அலுவலர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், இந்த எண்ணிக்கை கணிக்கப்பட்டுள்ளதாவும் அவர் கூறியுள்ளார். மேலும், கடந்த 10 ஆண்டுகளில் ரஷ்யா 15 வீரர்களை ஆப்கானிஸ்தானிடம் இழந்துள்ளதாகவும் நேட்டோ கூறியுள்ளது.
முன்னதாக உக்ரைன் தனது சொந்த ராணுவ இழப்புகள் பற்றியத் தகவலை வெளியிட்டது. அதில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு சுமார் 1,300 உக்ரைன் வீரர்கள் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி கூறியிருந்தார். மேலும் ரஷ்யாவை குற்றஞ்சாட்டி, போர் தொடங்குவதற்கு முன்னரே, பல்லாயிரக்கணக்கான ரஷ்ய வீரர்கள், கடுமையான நடவடிக்கைகளுக்கு பயந்து தப்பி ஓடிவிட்டனர் என்றும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: பினராய் விஜயன், நரேந்திர மோடி சந்திப்பு!