கரோனா வைரஸ் நோய் உலக நாடுகளை தொடர்ந்து அச்சுறுத்திவருகிறது. பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவரும் இந்நோய்க்கான மருந்தை கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் திணறிவந்தனர். இந்நிலையில், பெருந்தொற்றுக்கான மருந்தை ரஷ்யா கண்டுபிடித்துள்ளது. இதையடுத்து, அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதினின் மகளுக்கு இந்த மருந்து செலுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், அந்த மருந்தின் நம்பகத்தன்மை குறித்து உலக நாடுகள் கேள்வி எழுப்பியுள்ளன.
இதுகுறித்து புதின் கூறுகையில், "போதுமான பரிசோதனை செய்த பின்பே கண்டுபிடிக்கப்பட்ட கரோனா மருந்து பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அது உருவாக்குகிறது. எனது மகளுக்கு இரண்டு முறை மருந்து செலுத்தப்பட்டுள்ளது. அவர் நன்றாக உள்ளார். மருந்து செலுத்தப்பட்டபோது, அவரின் உடல் வெப்பம் 38 டிகிரி செல்சியஸாக இருந்தது. அடுத்த நாள் இரண்டாவது முறையாக செலுத்தப்பட்டபோது, உடலின் வெப்பம் 37 டிகிரி செல்சியஸாக குறைந்தது" என்றார்.
அதிபரின் இரண்டு மகள்களில் ஒருவருக்கு மட்டுமே இந்த மருந்து செலுத்தப்பட்டுள்ளது. மரியா, கேத்ரினா இவர்களில் யாருக்கு மருந்து கொடுக்கப்பட்டது என்ற தகவல் வெளியாகவில்லை.
கரோனாவால் அதிகம் பாதிப்படைந்த மருத்துவ பணியாளர்களுக்கு முதற்கட்டமாக மருந்து கொடுக்கப்படும் என அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவக்கின்றன. பெரிய அளவிலான மருந்து உற்பத்தி செப்டம்பர் மாதம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் மாத தொடக்கத்தில், மருந்து அனைவருக்கும் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்றாம் கட்ட ஆய்வக பரிசோதனைக்கு முன்பே மருந்து மனித பயன்பாட்டிற்கு விடப்பட்டதற்கு விஞ்ஞானிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வழக்கமாக, மூன்றாம் கட்ட ஆய்வக பரிசோதனையின்போது ஆயிரக்கணக்கான மக்களுக்கு மருந்து செலுத்தப்படும். இவை, எதுவும் மேற்கொள்ளாத காரணத்தால் பின் விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.