பிரிட்டன் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விரைவாக நிறைவேற்றப்பட்ட பிரெக்ஸிட் சட்டத்திற்கு இரண்டாம் எலிசபெத் ராணி ஒப்புதல் வழங்கியுள்ளார். இதன்மூலம், புத்தாண்டு அன்று ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் அதிகாரப்பூர்வமாக வெளியேறவுள்ளது. அதனை புதிய தொடக்கம் என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றிய சட்டத்தை ஒரே நாளில் நிறைவேற்றியதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு போரிஸ் ஜான்சன் நன்றி தெரிவித்துள்ளார். 27 உறுப்பு நாடுகள் கொண்ட ஐரோப்பிய ஒற்றை சந்தையிலிருந்து பிரிட்டன் இன்று இரவு 11 மணிக்கு விலகுகிறது. இதுகுறித்து போரிஸ் ஜான்சன் கூறுகையில்,
"நமது நாட்டின் எதிர்காலமானது நம் கையில் தற்போது உள்ளது. பிரிட்டன் நாட்டின் பொதுநலனை மனதில் வைத்துக்கொண்டு இதனை கடமையாக ஆற்றுவோம். டிசம்பர் 31ஆம் தேதி இரவு, நாட்டின் வரலாற்றில் ஐரோப்பிய ஒன்றியத்துடனான புதிய உறவில் ஒரு புதிய தொடக்கம் படைக்கப்படவுள்ளது" என்றார். பிரிட்டன் நாடாளுமன்ற மேலவையில் 448 உறுப்பினர்களின் ஆதரவோடு சட்டம் இயற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.