இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனியை ரஷ்யா வீழ்த்தியதைக் கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் மே ஒன்பதாம் தேதி போர் வெற்றி தினமாகக் கொண்டாடப்படும். அன்றைய தினம் ராணுவ வீரர்கள் அணிவகுப்பில் ஈடுபடுவது வழக்கம்.
அதன்படி, 75ஆவது ஆண்டு போர் வெற்றி தினத்தை சிறப்பிக்கும்வகையில் இந்தாண்டு வெகுவிமரிசையாகக் கொண்டாட ரஷ்யா திட்டமிட்டிருந்தது. ஆனால், கரோனா பெருந்தொற்று காரணமாக விழா எளிமையாகக் கொண்டாடப்பட்டது. அணிவகுப்பும் ஜூன் 24ஆம் (இன்று) தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அதன்படி, இன்று ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள செஞ்சதுக்கத்தில் பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. இதில், சோவியத் யூனியன் (அப்போதைய ஒன்றிணைந்த ரஷ்யா), மங்கோலியா, செர்பியா நாடுகளிலிருந்து 14 ஆயிரத்துக்கும் அதிகமான ராணுவத்தினர் கலந்துகொண்டனர். இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட டி-34 பீரங்கிகள், அணு ஆயுத ஏவுகணைகள் உள்பட 230 ராணுவ வாகனங்களும் அணிவகுத்துச் சென்றன.
நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின், "நாஜிகளை செம்படையினர் தடுத்து நிறுத்தாமல் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.
மிகவும் கொடூரமான, தீயசக்தியிடமிருந்து நம் மக்கள் மீண்டெழுந்துள்ளனர். இதுதான் இரண்டாம் உலகப்போரின் கலப்படமில்லாத உண்மை. நம் வரலாற்றை நம் குழந்தைகளுக்குச் சொல்லி வளர்க்க வேண்டும்" என்றார்.
இந்த உரையில் கரோனா பெருந்தொற்று குறித்து புடின் ஒருமுறைகூட குறிப்பிடவில்லை. அமெரிக்கா, பிரேசிலைத் தொடர்ந்து ரஷ்யாவில்தான் கரோனா வைரசின் தாக்கம் அதிகமாக உள்ளது. அங்கு தினமும் ஏழாயிரத்துக்கும் மேற்பட்டோர் நோய்த்தொற்றுக்கு ஆளாகின்றனர்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பல பார்வையாளர்கள் முகக்கவசம் அணிந்திருந்தாலும், அணிவகுப்பில் கலந்துகொண்ட ராணுவத்தினர் முகக்கவசம் அணியவில்லை. அதிபர் புடின், அவருடனிருந்த ராணுவ உயர் அலுவலர்கள் உள்ளிட்டோரும் முகக்கவசம் அணியவில்லை.
தனிமைப்படுத்தலுக்குப் பிறகே ராணுவ வீரர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டதாக அந்நாட்டு செய்தித்தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 2ஆம் உலகப்போரின் நினைவுதினம்: இந்திய வீரர்கள் ரஷ்யாவில் அசத்தல் அணிவகுப்பு