கோவிட்-19 வைரஸ் தொற்றின் தாக்கம் சீனாவில் படிப்படியாக குறைந்துவருகிறது. இருப்பினும், மற்ற நாடுகளில் குறிப்பாக இத்தாலி, இங்கிலாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளில் வைரஸ் தொற்றின் தாண்டவம் தற்போதுதான் அதிகரித்துள்ளது.
இங்கிலாந்தில் வைரஸ் தொற்று காரணமாக இதுவரை மூன்றாயிரத்து 983 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 177 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த அந்நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறார்.
இந்நிலையில், வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இரவு கேளிக்கை விடுதிகள், உடற்பயிற்சிக் கூடங்கள், உணவங்களுக்குத் தடைவிதிக்கப்படுவதாக போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், "இரவு கேளிக்கை விடுதிகள், உடற்பயிற்சிக் கூடங்கள், உணவகங்கள், திரையரங்குகள் ஆகியவற்றை வெள்ளிக்கிழமை முதல் மறுஅறிவிப்பு வரும் திறக்கக் கூடாது" என்று அறிவித்துள்ளார்.
இருப்பினும், உணவகங்களிலிருந்து பார்செல்களை எடுத்தச் செல்லலாம் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். மேலும், மற்றவர்களுடனான தேவையற்ற தொடர்புகளை மக்கள் குறைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
மிகவும் அவசியம் என்றால் மட்டுமே லண்டன்வாசிகள் பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கரோனாவால் ட்விட்டர் எடுத்த அதிரடி முடிவு