ஏழை, பணக்காரர் என பார்க்காத கரோனா வைரஸ் நோய் அனைத்து தரப்பினரையும் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது. பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், இளவரசர் பிரின்ஸ் சார்லஸையும் கரோனா விட்டுவைக்கவில்லை. இதையடுத்து, ஸ்காட்லாந்தில் உள்ள ராணி பால்மோரால் எஸ்டேட்டில் அவர் தனிமைப்படுத்தப்பட்டார். இந்நிலையில், அவர் குணமடைந்துவருவதாக அரசு தகவல் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து அரசின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், "மருத்துவரின் ஆலோசனைகளுக்கு பிறகு அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். தற்போது நல்ல உடல்நிலையில் உள்ளார். அரசின் விதிகளை அவர் பின்பற்றிவந்தார்" என்றார்.
இதனிடையே, அவரின் மனைவி கமிலா, மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். ஆனால், அவர் கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. கரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்தும் விதமாக உலக தலைவர்கள் கை குலுக்குவதை தவிர்த்துவிட்டு இந்திய கலாசாரமான வணக்கம் தெரிவிப்பதை பின்பற்றிவந்தனர். அதில், முக்கியமானவர் பிரின்ஸ் சார்லஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கரோனா - தனிமைப்படுத்தப்பட்ட இஸ்ரேல் பிரதமர்!