கோவிட்-19 வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் மோசமாகிவருகிறது. இந்த வைரஸ் தொற்று தற்போது ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும் மிக வேகமாக பரவிவருவதாக உலக சுகாதார அமைப்பு சமீபத்தில் தெரிவித்திருந்தது.
ஐரோப்பிய நாடுகளில் இத்தாலியின் நிலைமைதான் மிகவும் மோசமாக உள்ளது. இதுவரை இத்தாலியில் 86,498 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகிலேயே அதிகபட்சமாக இத்தாலியில்தான் இந்த வைரஸ் தொற்று காரணமாக 9,134 பேர் உயிரிழந்தனர்.
வைரஸ் பரவல் காரணமாக வாடிகன் நகரிலுள்ள செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் மக்கள் யாரும் பங்கேற்காத பிரார்த்தனையை போப் பிரான்சிஸ் நடத்தினார். ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ், ஈஸ்டர் புனித நாள்களில் நடைபெறும் இந்த பிரார்த்தனையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பது வழக்கம்.
ஆனால் இம்முறை கரோனா வைரஸ் தொற்று காரணமாக போப் பிரான்சிஸ் தனிமையில் பிரார்த்தனை நடத்தினார். சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்த பிரார்த்தனையின்போது பேசிய அவர், "ஏழை, பணக்காரர் என்று பேதமின்றி தற்போது அனைவரும் ஒரு படகில் இருக்கிறோம். இப்போது நாம் ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாக இருக்க வேண்டியது அவசியம்.
இந்த பெருந்தொற்று பரவுவதற்கு முன் ஏழைகளின் குரலுக்கு மதிப்பளிக்காமல் பேராசையால் லாபத்தை மட்டும் குறிக்கோளாக வைத்திருந்தோம். நோய் வாய்ப்பட்ட உலகில் நாம் மட்டும் மிக ஆரோக்கியமாக இருப்பதாக நினைத்துக்கொண்டோம்" என்றார்.
வாடிகன் நகரில் போப் பிரான்சிஸ் தனிமையில் நடத்திய சிறப்புப் பிரார்த்தனை வீடியோ சமூக வலையதளங்களில் வைரலாக பரவிவருகிறது.
இதையும் படிங்க: 5 நிமிடங்களில் கரோனா சோதனை - அசத்தும் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள்!