கியேவ்: வடமேற்கு உக்ரைனில் செவ்வாய்க்கிழமை (ஜூலை21) ஆயுதமேந்திய ஒருவர் பஸ்ஸைக் கைப்பற்றி, அதிலிருந்த சுமார் 20 பேரை பிணைக் கைதிகளாக சிறைப்பிடித்துச் சென்றதாக அந்நாட்டு போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் கியோவ் பகுதிக்கு மேற்கே 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லுட்ஸ்க் நகரில் நடந்துள்ளது. இதையடுத்து காவலர்கள் அந்த இடத்தை முழுவதுமாக தடுப்புகள் அமைத்து பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
இது குறித்து காவலர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சம்மந்தப்பட்ட நபர் கைகளில் வெடிபொருள்களை எடுத்து சென்றுள்ளார். அவரிடம் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களும் உள்ளன. அவரை விரைந்து கைது செய்துவிடுவோம்” எனத் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் சம்பவ பகுதியில் வெடிச்சப்தம் கேட்டதாக, உக்ரைன் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. துப்பாக்கி முனையில் 20 பயணிகள் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள சம்பவம் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.