மாஸ்கோ: ரஷ்ய நாட்டைச் சேர்ந்த மருந்து நிறுவனம் தயாரித்த 'ஸ்பூட்னிக் வி' கரோனா தடுப்பு மருத்தை சில உலக நாடுகளும், அந்நாட்டில் உள்ள பெரிய மருந்து நிறுவனங்களும் அரசியலாக்கி அதனை அவதிப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "முதலில் ஸ்பூட்னிக் வி தடுப்பு மருந்தை அரசியலாக்கிய சிலர், கண்ணியமற்ற முறையில் தடுப்பு மருந்தின் நம்பகத்தன்மையை குலைக்கும் வகையிலான செயல்பாடுகளை செய்து வருகின்றனர். பிற நாடுகளுக்கு ஸ்பூட்னிக் வி சென்றுவிடாமல் தடுக்கும் வகையில் சில உலக நாடுகளும், அங்குள்ள பெரிய மருந்து நிறுவனங்களும் செயல்படுகின்றன." என்றார்.
முன்னதாக, நாட்டு மக்களுக்கு கரோனா தடுப்பூசியை செலுத்த புதின் உத்தரவிட்டிருந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் உலகிலேயே முதல் முறையாக கரோனாவுக்கான தடுப்பு மருந்தாக ஸ்பூட்னிக் வி அங்கீகரிக்கப்பட்டது. இதன் மீதான சந்தேகங்களுக்கு முற்றுபுள்ளி வைக்கும் விதமாக, தனது மகள்களில் ஒருவருக்கு இந்த மருந்து செலுத்தப்பட்டதாக, புதின் தெரிவித்திருந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மக்களின் பயன்பாட்டிற்கு வந்த இந்த தடுப்பூசியை பலரும் அச்சம் காரணமாக தவிர்த்து வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் முன்னதாக தகவல் வெளியிட்டன.
இதையும் படிங்க: 50% பெண் ஊழியர்கள் என்ற இலக்கை நோக்கி ட்விட்டர்