கரோனா வைரஸ் தொற்றால் அதிக பாதிப்பை சந்தித்த நாடுகளின் பட்டியலில் ஜெர்மனியும் இடம்பெற்றிந்தது. ஆனால் தற்போது கரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் மற்ற நாடுகளுக்கு முன்மாதிரியாக இருக்கிறது. ஏப்ரல் 14ஆம் தேதி தெரிவிக்கப்பட்ட தகவலின்படி, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1 லட்சத்து 32 ஆயிரம் நபர்களில் பாதி பேர் குணமடைந்தனர். இதற்கு முக்கிய காரணம் அரசின் நடவடிக்கைகளும், பொதுமக்களின் விழிப்புணர்வுமே ஆகும் என டாக்டர் மரியா சென்னமனேனி தெரிவிக்கிறார். இவர் வெமுலாவாடா (தெலங்கானா மாநிலம்) எம்எல்ஏ சென்னமனேனியின் மனைவி ஆவார். கடந்த 30 வருடங்களாக பெர்லினில் உள்ள கிளினிகும் பச் மருத்துவமனையில் இயன்முறை மருத்துவராக பணியாற்றி வருகிறார்.
ஜெர்மனியின் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஈநாடு பத்திரிகைக்கு மரியா அளித்த தொலைபேசி நேர்காணலில், ஜனவரி 27ஆம் தேதி ஜெர்மனியில் கரோனா தொற்றுள்ள முதல் நபர் கண்டறியப்பட்டார். சீனாவின் வூகானைச் சேர்ந்த அவரது அலுவலக நண்பரிடமிருந்து இந்தத் தொற்று அவருக்கு பரவியது தெரியவந்தது. இத்தாலி, ஈரான், சீனாவைச் சேர்ந்த பயணிகள் மூலம் இத்தொற்று ஜெர்மனிக்கு பரவியது. ஏப்ரல் 14ஆம் தேதி நிலவரப்படி இங்கு 1 லட்சத்து 32 ஆயிரம் நபர்களுக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டது. 3,495 உயிரிழப்புகள் நேர்ந்திருந்தன. கரோனா பரவலை தடுக்க அரசாங்கம் T3 எனும் சிறந்த உத்தியை வகுத்தது. அடையாளம் காணுதல், பரிசோதித்தல், சிகிச்சை அளித்தல் (‘Trace, test, treat’) என்பதுதான் அந்த உத்தி. இதன்மூலம் கரோனா பரவல் குறைந்து, இறப்புகள் தவிர்க்கப்பட்டன. இதுவரையில் 64,300 பேர் இத்தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.
கரோனா தொற்று பரவலின் தொடக்கத்தில் பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து 5 முதல் 7 நபர் வரை இந்த வைரஸ் பரவியது. தற்போது அது கணிசமாக குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி இத்தொற்றால் பாதிக்கப்பட்ட 2,294 நபர்கள் அவசர சிகிச்சை பிரிவில் உள்ளனர், அதில் 73 சதவிதம் பேருக்கு வென்டிலேட்டர் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ராபர்ட் கோச் ஆய்வு நிறுவனத்தின் உதவியுடன் ஜெர்மனி அரசு வைரசை தடுப்பதற்கான நடவடிக்கையில் இறங்கியது. மார்ச் 22ஆம் தேதி தேசிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, சர்வதேச எல்லைகள் மூடப்பட்டன. அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு மட்டுமே மக்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர். ஜெர்மனியில் 132 கரோனா கண்டறிதல் மையங்கள் அமைக்கப்பட்டு, வாரத்திற்கு 5 லட்சத்துக்கு அதிகமான சோதனைகள் நடத்தப்பட்டன. இதுவரை 13 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு சோதனை நடத்தப்பட்டுள்ளது.
மருத்துவர்கள் கரோனா அறிகுறியுள்ள நபர்களைக் கண்டறிந்து உடனடி சிகிச்சை வழங்கினர். தொலைபேசியின் மூலம் மருத்துவர்களை தொடர்பு கொண்டு ஆலோசனை பெறும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. அரசின் மருத்துவ திட்டங்களும், நல உதவிகளும் கரோனா பரவலை தடுக்க பெரிதும் உதவின. 16 மாநிலங்களைக் கொண்ட ஜெர்மனியின் மொத்த மக்கள் தொகை 8 கோடி ஆகும். கல்வி மற்றும் சுகாதாரத் துறை முழுவதுமாக அரசாங்கத்தின் கீழ் இயங்குகிறது. ஜெர்மனி அராசங்கம் தனி நபரின் சுகாதார நலனுக்காக ஒரு ஆண்டுக்கு 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவு செய்கிறது. இது தனி நபர் சுகாதார நலனுக்கு செலவளிக்கும் நாடுகளின் பட்டியலில் பல நாடுகளை விட அதிகமாகும். ஒவ்வொரு குடிகனுக்கும் இங்கு மருத்துவ காப்பீடு உண்டு. இங்குள்ள 621 மருத்துவமனைகளில் 1 லட்சம் மக்களுக்கு படுக்கை வசதி செய்யப்பட்டுள்ளன. அனைவருக்கும் மருத்துவ பரிசோதனைகள் இலவசம். 28 ஆயிரம் வென்டிலேட்டர் வசதி மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் 40 ஆயிரம் படுக்கை வசதிகள் உள்ளன. கரோனா வைரஸ் பரவல் இருப்பினும், மற்ற நோயாளிகளுக்கான மருத்துவமனைகள் இயல்பாக இயங்கி வருகின்றன.
இந்தியாவும் எனக்கு ஜெர்மனி போலதான், 130 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியாவில் தேசிய அளவிலான ஊரடங்கை சமாளிக்க பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றார். இந்திய அரசாங்கம் அறிவித்த ஊரடங்கால் விளிம்பு நிலை மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியிருந்தாலும், கரோனா பரவலை தடுக்க இது ஒரு சரியான முடிவு என பலரும் பாராட்டிவருகின்றனர்.