உலகெங்கும் கரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே இருக்கிறது. கரோனா தொற்றுக்கு மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படாததால் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மருந்து கண்டுபிடிக்காதபோதும் பல நாடுகளும் ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்து, பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கிவிட்டன. இதனால் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் திங்கட்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ராஸ் அதனோம், "தற்போதைய சூழ்நிலையில் இயல்புநிலை திரும்புவதற்கான வாய்ப்புகள் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை இல்லை. ஐரோப்பியா மற்றும் ஆசியாவிலுள்ள பல நாடுகள் வைரஸ் தொற்றை முழுவதுமாகக் கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டன. இருப்பினும், பல நாடுகளில் வைரஸ் பரவல் படுமோசமாகியுள்ளது. தற்போதுள்ள சூழ்நிலையைப் பார்த்தால் இயல்பு நிலை திரும்புமா என்ற சந்தேகம் நாளுக்குநாள் அதிகரிக்கிறது.
நமது எதிர்காலம் நிச்சயமற்று உள்ளது. வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த நடவடிக்கைகளைக் கையாண்ட நாடுகளில் மட்டுமே வைரஸ் பரவல் கட்டுக்குள்வந்துள்ளது. வைரஸ் தொற்று மிக அதிகமாக உள்ள இடங்களில்கூட சில குறிப்பிட்ட நடவடிக்கைகளைக் கையாள்வதன் மூலம் வைரஸ் தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவர முடியும்" என்றார்.
மேலும், தற்போது புதிதாக தொற்று உறுதிசெய்யப்படுவதில் பாதிக்கும் மேல் அமெரிக்காவிலேயே இருக்கிறது என்றும், முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகும் என்றும் அவர் கூறினார். இதற்கிடையே வைரஸ் தோற்றம் குறித்து அறிந்துகொள்ள உலக சுகாதார அமைப்பின் இரண்டு வல்லுநர் குழு சீனாவுக்குச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: முதன்முறையாக மாஸ்க் அணிந்த ட்ரம்ப்... காரணம் என்ன?