ஐரோப்பிய ஒன்றியக் குழு தலைவர் உள்ளிட்ட பல முக்கிய பொறுப்புகளுக்குப் புதிய தலைவர்கள் ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றுக்கொண்டனர். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறவுள்ள இந்த இக்கட்டான சூழ்நிலையில் புதிதாகப் பதவியேற்றுக்கொண்டவர்களின் செயல்பாடுகள் மீது பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
ஐரோப்பிய கமிஷன் தலைவராக இருந்த ஜீன்-கிளாட் ஜுங்கர் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டு இரண்டு நாட்களில் ஜெர்மனியைச் சேர்ந்த உர்சுலா வான் டெர் லேயன் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். ஐரோப்பிய ஒன்றியத்தின் வரலாற்றிலேயே இப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல் பெண்மணி என்று சாதனையையும் இவர் படைத்துள்ளார்.
இதேபோல ஐரோப்பிய ஒன்றியக் குழு தலைவராக இருந்த டொனால்ட் டஸ்கிற்குப் பதிலாக பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த சார்லஸ் மைக்கேல் பதவியேற்றுக்கொண்டு, ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களின் உச்சிமாநாட்டிற்குத் தலைமை தாங்கினார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் வரலாற்றின் மிக முக்கிய நாளான லிஸ்பன் ஒப்பந்தத்தின் 10 வது ஆண்டு விழாவைக்கொண்டாடத் தாயாராகிவரும் நிலையில் புதிதாக தலைவர்கள் பொறுப்பேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த விழாவைத் தொகுத்து வழங்கிய ஐரோப்பிய நாடாளுமன்றத் தலைவர் டேவிட் சசோலி புதிதாக பதிவியேற்றுக்கொண்டவர்களை வரவேற்றார். மேலும், ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள 508 மில்லியன் குடிமக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு அழைப்பும் விடுத்தார்.
இதையும் படிங்க: லண்டன் பிரிட்ஜ் தாக்குதலுக்குப் பொறுப்பேற்ற ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு