ரஷ்யாவில் வோல்கோகிராட் நகரில் அமைந்துள்ள 'தி மதர்லேண்ட் கால்ஸ்' சிலை குறிப்பிடத்தக்கது. நீண்ட வாளை பிடித்துக் கொண்டு பெண் ஒருவர் கம்பீரமாக நிற்பது போன்று கட்டப்பட்டிருக்கும் இந்த 278 அடி சிலை, ஐரோப்பியக் கண்டத்திலேயே மிகவும் உயரமான சிலையாகும்.
20 லட்சம் பேர் உயிரிழக்கக் காரணமான ஸ்டாலின்கிராட் (வோல்கோகிராட்) போரின் நினைவிட வளாகத்தில் இந்தச் சிலை அமைந்துள்ளது.
1968ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்ட 'தி மதர்லேண்ட் கால்ஸ்' சிலையின் பாதம் அருகே அடையாளம் தெரியாத 35 ஆயிரம் ரஷ்ய வீரர்களின் உடல்கள் புதைக்கப்பட்டுள்ளன.
புனரமைப்புப் பணிக்காகக் கடந்த மூன்று ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த இந்தச் சிலை, மே 9ஆம் தேதி மீண்டும் திறக்கப்பட்டது.
சோவியத் யூனியன் நாடுகளில் எங்குத் திரும்பினாலும் இதுபோன்ற போர் நினைவுச் சின்னங்களை நாம் பார்க்க முடியும்.
இரண்டாம் உலகப்போரில் வீரமரணமடைந்த ரஷ்ய வீரர்கள் தாயகத்துக்குச் செய்த தியாகம் பறைசாற்றும் வகையில் இவை அமைந்துள்ளன.
மாஸ்கோ நகரின் கிரெம்லின் சுவர் அருகே அமைந்துள்ள 'டோம்ப் ஆஃப் தி அன்னோன் ஸ்சோல்ஜர்ஸ்' போர் நினைவிடத்தை நாம் தவிர்த்துவிட முடியாது.
ஆயிரக்கணக்கான அடையாளம் தெரியாத ரஷ்ய வீரர்களின் உடல்கள் 1966ஆம் ஆண்டு (அதாவது மாஸ்கோ போர் முடிந்த 25 ஆண்டுகள் கழித்து) இந்த நினைவிடத்துக்கு மாற்றப்பட்டது.
இங்கு அணையா ஜோதி ஒன்று எப்போதும் எரிந்துகொண்டிருக்கும். 'உங்களது பெயர்கள் எங்களுக்குத் தெரியாது. ஆனால் உங்கள் தியாகம் காலத்தால் அழிக்க முடியாதவை' என்ற வாசகம் பொறிக்கப்பட்ட நினைவுத்தூண் ஒன்று இங்கு அமைந்துள்ளது.
சோவியத் யூனியனிலிருந்து பிரிந்துசென்ற பெலாரஸ் நாட்டுத் தலைநகர் மின்ஸ்கில் 'மவுண்ட் ஆஃப் குளோரி' என்ற திறந்தவெளிப் போர் நினைவிடம் அமைந்துள்ளது.
இரண்டாம் உலகப்போரில் உயிரிழந்த வீரர்களைக் கவுரவிக்கும் வகையில், 1969ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த நினைவிடத்துக்கு ஒன்பது சோவியத் யூனியன் நகரங்களிலிருந்து மண் எடுத்துவரப்பட்டது.
ஜெர்மனியுடனான போரின்போது பெலாரசில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் உயிரிழந்தனர்.
இது குறித்து டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறைத் தலைவரும், பேராசிரியருமான முனைவர் ஸ்டாக் பால்மர் கூறுகையில், "பெலாரஸ் போரில் 2.7 கோடி பேர் உயிரிழந்தனர். நவீன வரலாற்றில் இதுபோன்றதொரு கொடூர நிகழ்வு நடந்ததில்லை" என்றார்.
சோவியத் யூனியன் நாடுகளின் தேசிய அடையாளமாக விளங்கும் இந்த நினைவுச் சின்னங்கள், சோவியத் கம்யூனிச கட்சியின் பரப்புரைக்கும் பயன்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க : கோவிட்-19க்கு தடுப்பூசி உருவாக்கிவரும் ராக்ஃபெல்லரின் தொண்டு நிறுவனம்!