லண்டன்: தடுப்பூசிக்கான தவணைகளில் இருவேறு நிறுவனங்களின் கரோனா தடுப்பூசியை எடுத்துக் கொள்வதில் எவ்வித பாதிப்பும் இல்லை என லான்செட் பத்திரிகை தெரிவித்துள்ளது.
நான்கு வார கால இடைவெளியில், இருவேறு நிறுவனங்களின் தடுப்பூசியை இரண்டு தவணைகளாக 50 வயதுக்கு மேற்பட்ட 800 நபர்களுக்கு செலுத்தப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதாவது முதல் தவணையில் ஆக்ஸ்ஃபோர்டு - அஸ்ட்ரா செனக்கா தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்களுக்கு, 4 வார இடைவெளிக்குப் பிறகு இரண்டாவது தவணையாக ஃபைசர் / பயோ-என்-டெக் நிறுவனத்தின் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இதில், அவர்களின் உடலில் பெரும் பாதிப்புகள் எதுவும் தென்படவில்லை என லான்செட் பத்திரிகை தெரிவித்துள்ளது. எனினும், ஒரே நிறுவனத்தின் தடுப்பூசியை மட்டும் எடுத்துக்கொள்பவர்களை விட, இப்படி கலப்பில் எடுத்துக்கொள்பவர்களுக்கு கூடுதலாக பக்கவிளைவுகள் இருக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.