பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மாக்ரோனும், ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கலும் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினர். அதில் பொருளாதார நெருக்கடி குறித்தும், அது தொடர்பான நடவடிக்கைகள் குறித்தும் பேசப்பட்டது. அதிபர் ஏஞ்சலா மெர்கல் ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய நாடுகள் கரோனாவால் அதிகம் பாதித்துள்ளன எனக் குறிப்பிட்டார்.
அதிபர் மாக்ரோன், ஐரோப்பிய பொருளாதாரம், இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் சந்தித்த மிகப் பெரிய நெருக்கடி என கரோனாவை ஒப்பிட்டு விளக்கினார். தொடர்ந்து பேசிய அவர், கரோனா பரவுதலைத் தடுக்க எடுக்கப்பட்ட தொடக்க கால நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை, சுகாதாரத்துறை அணுகுமுறை இன்னும் மேம்பட வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
இந்த காணொலி உரையாடலில், பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீள ஐரோப்பிய ஒன்றியத்தின் வாயிலாக 500 பில்லியன் டாலர் நிதியை திரட்டி மீட்பு நிதியாக பயன்படுத்தும் திட்டத்தினை இரு அதிபர்களும் முன்வைத்தனர்.
இது குறித்து பேசிய மெர்கல், “ஐரோப்பிய ஒன்றியங்களின் வரவு, செலவுத்திட்டங்கள் மூலம் 500 பில்லியன் டாலர் நிதி திருப்பி அடைக்கப்படும். இது கடன் அல்ல, நிதி என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இந்த நிதியினால் பயன் பெறும் நாடுகள் அதனை திருப்பிச் செலுத்த வேண்டாம்” என விளக்கினார்.
இதையும் படிங்க: இனி இருமினால் பிரச்னை இல்லை - புதிய மாத்திரை தயாரிப்பில் ஆராய்ச்சியாளர்கள்!