ஃபிரான்சின் கிழக்குப் பிராந்தியத்திலுள்ள அமெரிஷ்விர் நகரம் கரோனா தொற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்நகரின் மருத்துவமனைகளிலுள்ள அனைத்துப் பணியாளர்களுக்கு கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்மூலம் கரோனா தொற்றால் பாதிக்கப்படாதவர்களைக் கண்டறிந்து அவர்கள் ஒருவருடன் ஒருவர் நேரத்தைக் கழிக்க தனித்துவமான சூழலை அமைத்துக் கொடுத்து இயல்பு வாழ்க்கையை மீட்டெடுக்க அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுக்கும் என மக்கள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் முதல் அந்நகரின் மருத்துவமனைகளிலுள்ள முதியவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட்டுவருகின்றனர். உணவுப் பொருள்கள் வாங்குவதற்குக்கூட வெளியே இவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
நான்கு சுவர்களுக்குள்ளேயே தங்கள் வாழ்க்கை முடங்கிப் போயுள்ளதாகவும், சக மனிதர்களைச் சந்திப்பதற்கு மட்டுமாவது தங்களுக்குச் சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும் எனவும் இவர்கள் கோரிக்கை வைத்துவருகின்றனர்.
இந்த முதியவர்களுக்கு கரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்கான வழிமுறைகளைத் தொடர்ந்து எடுத்துக்கூறினாலும், அவற்றை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவே சிரமப்பட்டுவருகின்றனர் எனச் செவிலி ஒருவர் வேதனைத் தெரிவித்துள்ளார்.
ஃபிரான்ஸ் நாட்டில் இறந்தவர்களில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் காப்பகங்களில் வசித்துவருபவர்கள் ஆவர். ஏப்ரல் 14ஆம் தேதி கணக்கின்படி அந்நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 8900 பேர் மருத்துவமனைப் பணியாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஜப்பானில் 10 ஆயிரம் பேருக்கு கோவிட்-19!