ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்வீடனில் பிறந்த வேதியியலாளர் ஆல்ஃபிரட் நோபல். இவர் இளம் வயதில் தனது தந்தையின் ஆயுத தொழிற்சாலையில் பணிபுரிந்தார். வேதியியலில் ஆர்வமுள்ள அவர் வெடிபொருட்களைப் பரிசோதித்து வந்தார். இதற்கிடையில் 1864ஆம் ஆண்டு ஒரு பயங்கர வெடி விபத்தில் அவரது இளைய சகோதரர் உயிரிழந்தார். இதனால் மிகவும் பாதிக்கப்பட்ட நோபல் ஒரு பாதுகாப்பான வெடிபொருளை உருவாக்க முனைந்தார். அதில் வெற்றியும் கண்டார். அவர் கண்டறிந்த வெடிபொருள் டைனமைட் என அழைக்கப்பட்டது.
இவரது இந்தக் கண்டுபிடிப்பை, முதலில் பாறையைத் தகர்க்கும் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்துடன் உருவாக்கினார். ஆனால் பின்னர் அது ஒரு பயங்கர ஆயுதமாக மாற்றப்பட்டது. இதுவே அவரை மனிதாபிமான முயற்சிகளை அங்கீகரிக்கும் அமைதிக்கான நோபல் பரிசை நிறுவ தூண்டியது.
நோபலுக்கு நான்கு வயதாக இருந்த போது, அவரது தந்தை வெடிபொருட்களை உற்பத்தி செய்வதற்காக ரஷ்யாவின் செயின்ட் பீட்டர் ஸ்பர்க்கிற்கு குடிபெயர்ந்தார். அங்கு அவர்கள் பொருளாதார ரீதியில் முன்னேற்றம் அடைந்ததை அடுத்து, அவரது பெற்றோர் அவரை ரஷ்யாவில் உள்ள தனியார் பள்ளிக்கு அனுப்பினர். அங்கு அவர் விரைவாக வேதியியலில் தேர்ச்சி பெற்றார். ஆங்கிலம், பிரஞ்சு, ஜெர்மன், ரஷ்ய மொழிகளிலும் அவரது சொந்த மொழியான ஸ்வீடிஷ் மொழியிலும் சரளமாக பேசினார்.
நோபல் தனது 18 வயதில் ரஷ்யாவை விட்டு வெளியேறினார். பாரிஸில் வேதியியல் படிப்பிற்காக சுமார் ஒரு வருடம் செலவிட்டார். பின்னர் அவர் அமெரிக்கா சென்றார். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் மீண்டும் ரஷ்யாவுக்குத் திரும்பி, தந்தையின் தொழிற்சாலையில் கிரிமியன் போருக்கான ராணுவ உபகரணங்களைத் தயாரிக்கத் தொடங்கினார். ஆனால், 1859ஆம் ஆண்டில் போர் நிறைவடைந்தபோது அந்நிறுவனம் திவாலானது. இதையடுத்து அவர்களது குடும்பம் மீண்டும் ஸ்வீடனுக்கு குடிபெயர்ந்தது.
1888 ஆம் ஆண்டில், நோபலின் சகோதரர் லுட்விக் பிரான்சில் இருந்த போது இறந்தார். ஒரு பிரெஞ்சு செய்தித்தாள் லுட்விக்கிற்குப் பதிலாக நோபலின் இரங்கலை தவறாக வெளியிட்டது. அதுமட்டுமின்றி அவர் டைனமைட் கண்டுபிடித்ததற்காக கடும் கண்டனத்தையும் வெளிப்படுத்தியது. இந்த நிகழ்வால் பாதிப்படைந்த அவர் இறந்த பிறகு தான் எப்படி நினைவுகூரப்படுவேன் என எண்ணி மனவேதனை அடைந்தார்.
இதையடுத்து, இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம் மற்றும் அமைதிக்காக உழைத்ததற்காக ஆண்களையும் பெண்களையும் கவுரவிப்பதற்காக நோபல் பரிசுகளை நிறுவ நோபல் தனது தோட்டத்தின் பெரும்பகுதியை ஒதுக்கி வைத்தார். ஸ்வீடனின் மத்திய வங்கியான ஸ்வெரிஜஸ் ரிக்ஸ்பேங்க், நோபலின் நினைவாக 1968 ஆம் ஆண்டில் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை நிறுவியது.
டைனமைட் ஆல்ஃபிரட் நோபலை பிரபலமாக்கிய கண்டுபிடிப்பு. இது சுரங்கங்கள், சாலைகள் மற்றும் இரயில் பாதைகளை உருவாக்குவதில் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. 1800ஆம் ஆண்டுகளின் பிற்பகுதி முழுவதும், நோபல் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவைச் சுற்றி தனது டைனமைட் தொழிற்சாலைகளைத் தொடர்ந்தார். வெடிபொருட்கள் குறித்த அவரது தொடர்ச்சியான பணிகள் 1875 ஆம் ஆண்டில் ஜெலட்டின் வெடித்தலைக் கண்டறியவும், 1887ஆம் ஆண்டில் பாலிஸ்டைட் கண்டறியவும் வழிவகுத்தது.
ஏராளமான மக்கள் அவரது சாதனையை கொண்டாடினார்கள், அவருக்கு மக்கள் மீது மிகுந்த ஈர்ப்பு இருந்தது. இருப்பினும், நாள்பட்ட மோசமான உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு தனிமையில் வாழ்ந்தார். சில நேரங்களில் அவர் மிகவும் தனிமையாக உணர்ந்திருக்கிறார், "நான் ஒரு தவறான மனிதர். ஆனால் மிகுந்த தயவானவர்" என்று அவர் குறித்து எழுதியுள்ளார்.
நோபல் ஒரு விஞ்ஞானி மட்டுமல்ல, இலக்கியத்தின் மீதும் அன்பு இருந்தது. அவர் கவிதை எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். மேலும் சில நாவல்களையும் எழுதியுள்ளார்.இறப்பதற்கு முன், நோபல் நெமஸிஸ் என்ற நாடகத்தை எழுதினார். இது 16 ஆம் நூற்றாண்டின் ஒரு உன்னதப் பெண்ணின் கதையை அடிப்படையாகக் கொண்டது.
அமைதிக்கான நோபல் பரிசு மூலம் அமைதியை அடைய உழைக்கும் மக்களை கௌரவிப்பதற்கும் அதனைப் பயன்படுத்தினார். நோபல் எந்தவொரு சட்ட ஆலோசனையும் இல்லாமல் தனது விருப்பத்தை எழுதினார்.
நோபல் 1896 ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் தேதி இத்தாலியின் சான் ரெமோவில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
நோபல் பரிசுகள் வழங்குவதற்காக 3 கோடியே 12 லட்சத்து 25 ஆயிரம் ஸ்வீடிஸ் பணத்தை சேமித்து வைத்திருந்தார். இது 2008ஆம் ஆண்டின் கணக்குப்படி 250 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு சமமானது.