உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரசின் தாக்கம் பல்வேறு நாடுகளில் தற்போது தான் குறையதொடங்கியுள்ளது. இந்த வைரசிற்கு எதிரான தடுப்பூசி, பல்வேறு சோதனைகளுக்குள்படுத்தப்பட்டு இஸ்ரேல், அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகளில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்நிலையில், டிசம்பர் 14ஆம் தேதி இங்கிலாந்து புதிய வகை கரோனா வைரஸ் பரவுவது கண்டறியப்பட்டது. முந்திய வைரசைவிட அதிக வேகத்தில் பரவும் தன்மையுடைய இந்தப் புதிய வகை வைரஸ் உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதனைக்கட்டுப்படுத்தும் நோக்கில் இங்கிலாந்தின் முக்கிய நகரங்களில் அந்நாட்டு அரசு மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்த வைரஸ் பரவல் அச்சுறுத்தல் காரணமாக இங்கிலாந்து நாட்டுனான விமான சேவைக்கு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தடை விதித்துள்ளன.
இந்நிலையில், ஜோர்டானைச் சேர்ந்த தம்பதி இருவருக்கு இந்தப் புதிய வகை கரோனா தொற்று பாதிப்பு இருப்பதை அந்நாட்டு அரசு உறுதிசெய்துள்ளது. இந்தத் தம்பதி இருவரும் டிசம்பர் 19ஆம் தேதி இங்கிலாந்திலிருந்து ஜோர்டான் திரும்பியதும் தெரியவந்தது.
மேலும், தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள இரண்டு நபர்களின் உடல்நிலையும் சீராக இருப்பதாக ஜோர்டான் சுகாதாரத் துறை அமைச்சர் ஓபீடாட் தெரிவித்துள்ளார். இந்தப் புதிய வகை கரோனா வைரஸ் ஐரோப்பாவின் பல நாடுகளில் பரவியுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: புதிய வகை கரோனா பரவல் எதிரொலி: வெளிநாட்டினர் ஜப்பான் வரத் தடை