சீனாவுக்கு அடுத்தபடியாக ஐரோப்பிய நாடான இத்தாலி கரோனா பெருந்தொற்றால் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில், இதனைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக அரசு பெரும்பான்மையான மக்களைத் தனிமைப்படுத்தியது.
ஆனாலும், இத்தாலியில் இரண்டாயிரத்து 978-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்நிலையில், 35 ஆயிரத்து 713 பேருக்கு கரோனா பாதிப்பு உள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கரோனா பெருந்தொற்றால் இறந்தவர்களில் 34.2 விழுக்காட்டினர் இத்தாலியைச் சேர்ந்தவர்களாவர். இதனைத் தடுக்கும்வகையில் இத்தாலியின் எல்லைகள் மூடப்பட்டுள்ளன. இருப்பினும், இத்தாலியில் கடந்த 24 மணி நேரத்தில் 475 பேர் உயிரிழந்துள்ளனர்.
இது குறித்து, இத்தாலிய தேசிய சுகாதார நிறுவனத்தின் தலைவர் சில்வியோ புருசாஃபெரோ கூறும்போது, "நாம் மனம் தளராமல் இருப்பதே முக்கியமானது. நமது முயற்சிக்கான பலன்களைக் கண்கூடாகப் பார்க்க கொஞ்சம் நாள்கள் பிடிக்கலாம்.
ஆனால், நாம் முழுமுயற்சி எடுக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக பலவீனமானவர்களை இன்னும் கவனமாகப் பாதுகாக்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: கரோனா வைரஸால் மக்களுக்கு நடமாட தடை: டைனோசராக மாறிய நபரின் வைரல் வீடியோ