சீனாவில் தொடங்கி உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பரவி, "கோவிட் 19" எனப்படும் கொரோனா வைரஸ் அனைவரையும் அச்சுறுத்திவருகிறது. சீனாவில் உக்கிரமாகச் செயல்படும் இந்த வைரஸால், சுமார் 2,500 மக்கள் உயிரிழந்ததாகவும், 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளதாகவும் சீனா அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டுக்குள் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன. இருப்பினும், 28 நாடுகளுக்குள் புகுந்து கடும் பாதிப்பை கொரோனா ஏற்படுத்திவருகிறது. இதை எதிர்க்க இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால், வைரஸ் தனது கோர முகத்தை அனைத்துப் பகுதிகளிலும் வெளிக்காட்டி மக்களின் உயிர்களைக் காவு வாங்கி வருகிறது.
இந்தச் சூழலில், இத்தாலி நாட்டில் கொரோனா வைரஸால் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக, அந்நாட்டின் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இத்தாலியில் கொரோனா வைரஸால் ஏற்படும் முதல் உயிரிழப்பு என்பதால், அந்நாட்டு மக்கள் பீதியடைந்துள்ளனர். பாதிப்பு கண்டறியப்பட்ட இருவரில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், மற்றொருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், அந்நாட்டு சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
மேலும் 19 மக்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது. முதல் உயிரிழப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, பொது இடங்களில் மக்கள் கூடுவது, பொது நிகழ்ச்சிகள் உள்ளிட்ட அனைத்துச் செயல்பாடுகளுக்கும், இத்தாலி அரசு தடை விதித்துள்ளது. அதேபோன்று அங்குள்ள பள்ளிகளை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கொரோனா வைரஸ் அறிகுறி - மதுரை இராசாசி மருத்துவமனையில் இருவர் அனுமதி!