சீனாவில் கடந்தாண்டு இறுதியில் பரவத் தொடங்கிய கோவிட்-19 வைரஸ் தொற்றின் தாக்கம் தற்போது குறைந்துள்ளது. இருப்பினும் இத்தாலியில் வைரஸ் தொற்றின் தாக்கம் கடந்த சில வாரங்களாகவே அதிகரித்துவருகிறது. அந்நாட்டில் முதியவர்களின் மக்கள் தொகை அதிகம் என்பதால் சீனாவைவிட உயிரிழப்புகள் அதிகரித்தன.
இந்நிலையில், இத்தாலியில் நேற்று மட்டும் 4,789 பேருக்கு கோவிட்-19 வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதன்மூலம் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 63,927ஆக உயர்ந்துள்ளது. இந்த வைரஸ் தொற்று ஒருநாளில் எட்டு விழுக்காடு அதிகரித்துள்ளது. தொற்று பரவத் தொடங்கிய பிப்ரவரி 21ஆம் தேதி முதல் மிகக் குறைந்த அளவில் வைரஸ் பரவல் பதிவுசெய்யப்பட்டது இதுவே முதன்முறையாகும்.
அதேபோல வைரஸ் தொற்றால் நேற்று மட்டும் 602 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 6,078ஆக உயர்ந்துள்ளது. முன்னதாக ஞாயிற்றுக்கிழமை 651 பேரும் சனிக்கிழமை 793 பேரும் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
சிகிச்சைப் பெற்றுவந்தவர்களில் நேற்று மட்டும் 7,432 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் உள்நாட்டுப் பாதுகாப்புச் சேவைப் பிரிவு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நியூசிலாந்தில் 100ஐத் தாண்டிய கரோனா; லாக்டவுன் அறிவிப்பு!