கோவிட்-19 வைரஸ் தொற்று கடந்தாண்டு இறுதியில் சீனாவில் பரவத் தொடங்கியது. இந்த வைரஸ் தொற்றால் இதுவரை பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் இந்த வைரஸ் தொற்று குறைந்துவரும்போதும், மற்ற நாடுகளில் இந்த வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.
இந்நிலையில், கோவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சீனாவைவிட தற்போது இத்தாலியில் அதிகமாக பதிவாகியுள்ளது.
நேற்று ஒரே நாளில், வைரஸ் தொற்று காரணமாக இத்தாலியில் 427 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் அந்நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,405ஆக உயர்ந்துள்ளது.
இந்த வைரஸ் தொற்று முதலில் தாக்கியதாகக் கருதப்படும் சீனாவில் இதுவரை 3,245 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், கோவிட் 19 வைரஸ் தொற்றால் உலகிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இத்தாலி மாறியுள்ளது.
இத்தாலியில் அதிகம் பேர் உயிரிழந்ததற்கு, அந்நாட்டிலுள்ள வயதானோரின் மக்கள்தொகை முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. ஜப்பானுக்கு அடுத்தப்படியாக அதிக முதியவர்களைக் கொண்ட நாடாக இத்தாலி இருக்கிறது. இதுவரை, அந்நாட்டில் உயிரிழந்தவர்களில் 87 விழுக்காட்டினர் 70 வயதுக்கு மேலானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தாலியில் வியாழக்கிழமை(மார்ச் 19) வரை 41,035 பேருக்கு கோவிட் 19 வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 5,322 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.