புதிய கரோனா வைரஸான கோவிட்-19 பெருந்தொற்று நோயைக் குணப்படுத்தும் தடுப்பூசியை இத்தாலி நாட்டின் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கிவிட்டதாக அறிக்கை ஒன்று கூறுகிறது. இதுகுறித்து, மருந்துகளை உருவாக்கும் நிறுவனமான டாகிஸின் தலைமை நிர்வாக அலுவலர் லூய்கி அவுரிசிச்சியோ கூறுகையில், “இது இத்தாலியில் உருவாக்கப்பட்ட ஒரு தடுப்பூசி.
இந்த கோடைக்காலத்துக்குப் பின்னர் மனிதர்கள் மீது இது பரிசோதிக்கப்படும்” என்றார். முன்னதாக, ஆராய்ச்சியாளர்கள் எலிகள் மீது இந்தத் தடுப்பூசியை வெற்றிகரமாக பரிசோதித்தனர். அவை எலிகளிள் உடலில் ஆன்டிபாடிகளை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளன. மேலும் வைரஸ், உயிரணுக்களுக்கு தொற்றுவதைத் தடுக்கின்றன.
இத்தாலிய ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, இந்தத் தடுப்பூசி கரோனா பாதிக்கப்பட்ட மனிதர்களுக்கு நல்வாய்ப்பாக இருக்கும். அதிதீவிரமாக பாதிக்கப்பட்டவர்களும் குணமடைவார்கள். மேலும் இந்தத் தடுப்பூசி தொடர்பாக சர்வதேச ஒத்துழைப்பையும் அவர்கள் எதிர்நோக்குகின்றனர்.
புதிய வகை கரோனா வைரஸான கோவிட்-19 பெருந்தொற்றுக்கு உலகில் 37 லட்சத்து 47 ஆயிரத்து 850 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு இரண்டு லட்சத்து 52 ஆயிரத்து 982 ஆகவும், மீட்பு 12 லட்சத்து 51 ஆயிரத்து 120 ஆகவும் உள்ளது. இத்தாலியில் இரண்டு லட்சத்து 13 ஆயிரத்து 13 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 29 ஆயிரத்து 315 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இதையும் படிங்க: 'கோவிட்-19 குறித்து சுதந்திரமான ஆய்வு தேவை': ஆஸ்திரேலியத் தூதர்