உலகளாவிய பெருந்தொற்று நோயான கோவிட்-19 காரணமாக இங்கிலாந்து கடுமையான பாதிப்புகளை சந்திக்க நேர்ந்தது. இதுவரை அங்கு 3 லட்சத்து 3 ஆயிரத்து 952 பேர் பாதிக்கப்பட்டும், 46 ஆயிரத்து 193 பேர் உயிரிழந்தும் உள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பொருளாதார சரிவு, உயிரிழப்புகள் என பெரும் நெருக்கடியை சந்தித்த அந்நாடு இப்போது தான் அதிலிருந்து மீளத் தொடங்கியுள்ளது. பரவலாக கோவிட்-19 பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. இருப்பினும், கரோனாவைக் கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு அறிவித்த ஊரடங்கு தளர்வுகளுடன் தற்போது தொடர்ந்து கொண்டிருக்கிறது.
அந்த வகையில், மக்களின் மனவாட்டத்தைப் போக்கவும் மாற்று சிந்தனைகளில் அவர்களை வழிநடத்தவும் தன்னார்வமாக பலர் பங்களிப்பு செலுத்து வருகின்றனர். அந்த வகையில், பாரம்பரிய இந்திய நடனமான பாங்கரா கலைஞர் ராஜீவ் குப்தா, சமூக ஊடகத்தின் வழியாக இலவச நடன வகுப்புகளைத் தொடங்கினார்.
சுறுசுறுப்பாகவும், உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை கூட்டவும், உற்சாக மனநிலையில் இருக்கவும் அவர் தொடங்கிய இந்த இலவச பயிற்சி அந்நாட்டின் பெரும்பாலான மக்களை கவர்ந்திழுந்தது. ஆயிரக்கணக்கானோர் நாள்தோறும் நடன ஆன்லைன் வகுப்பிற்கு வந்து நடனம் கற்க தொடங்கினர். அவரது இந்த சிறு முயற்சி அங்கு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், குப்தாவை கௌரவிக்கும் வகையில் இங்கிலந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், இந்த வாரத்திற்கு "பாயின்ட் ஆப் லைட்" எனும் விருதை வழங்கி பாராட்டினார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த குப்தா, "எனது பாங்கரா நடன வகுப்பு அமர்வுகள் ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு உதவக்கூடியதாக அமைந்ததற்கு நான் பாக்கியவானாக உணர்கிறேன்.
இந்த விருதைப் பெறுவதற்கு நான் உண்மையிலேயே நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இது எனக்குள் மேலும் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. இப்படிப்பட்ட அங்கீகாரத்தை நான் ஒருபோதும் நினைத்திருக்கவில்லை. இனி மறக்கப்போவதுமில்லை" என்றார்.