ஐ.நா.வுக்கான பாகிஸ்தான் மிஷன் என்ற அமைப்பின் அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் பாகிஸ்தான் தூதர் முனீர் அக்ரம், ஐ.நா பொதுச் செயலாளரால் பாதுகாப்பு சபையின் விவாதத்தில் வெளியிடப்பட்ட "பயங்கரவாத நடவடிக்கைகளால் ஏற்படும் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள்" என்ற தலைப்பிலான அறிக்கையை வெளியிட்டிருந்தார்.
அத்துடன், பாகிஸ்தானிற்குள் நுழைந்து எல்லைத் தாண்டிய பயங்கரவாத நடவடிக்கையில் இந்திய அரசு ஈடுபட்டதாக அந்நாடு குற்றஞ்சாட்டியுள்ளது. அதற்கு பதிலளித்த இந்திய அரசு, ஐ.நா பாதுகாப்பு அவையில் (யு.என்.எஸ்.சி) பாகிஸ்தான் கூறியிருக்கும் அப்பட்டமான பொய்களுக்கு மறுப்புக் கூற வேண்டிய கடமை உள்ளதாக தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பினர் அல்லாத நாடான பாகிஸ்தானுக்கு அதனை வெளியிட எந்த அதிகாரமும் இல்லை என இந்திய அரசு கூறியுள்ளது. இது தொடர்பாக ஐ.நா.சபைக்கு இந்தியா அரசு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அதில்,"ஐ.நா.வுக்கு பாகிஸ்தான் வெளியிட்டுள்ள அறிக்கையை நாங்கள் கண்டிருக்கிறோம்.
பாதுகாப்பு கவுன்சில் உறுப்பின நாடுகளாக இல்லாதவர்களுக்கு அனுமதியும், அதிகாரமும் இல்லாத நிலையில் ஐ.நா சபையின் உள்விவகார அறிக்கையை பாகிஸ்தான் அரசு எவ்வாறு வெளியிட்டது என்பதை நாங்கள் அறியவேண்டும். பாகிஸ்தானிய தூதரின் அறிக்கை நாங்கள் எதிர்பார்த்தபடியே இருந்தது. காஷ்மீரில் மனித உரிமை மீறல்களில் இந்தியா ஈடுபட்டுவருவதாகவும், குல்பூஷன் ஜாதவை பாகிஸ்தானுக்கு அனுப்பி எல்லைத் தாண்டிய பயங்கரவாத நடவடிகக்கைள் செய்ய முனைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.
பாகிஸ்தான் அரசானது, இந்தியாவுக்கு எதிரான எல்லை தாண்டிய பயங்கரவாதத்தின் மிகப்பெரிய ஆதரவாளராக உள்ளது என்பதை மறைக்க இப்போது இந்தியாவால் பயங்கரவாதத்திற்கு பலியாவதாக கூறுகின்றது. ஐக்கிய நாடுகளால் சர்வதேச பயங்கரவாதிகள் என அடையாளம் காட்டப்பட்ட பயங்கரவாதிகள், தடைசெய்யப்பட்ட அமைப்புகள் பாகிஸ்தானில் தான் அதிக அளவு இயங்கிவருகின்றன.
சிறப்பு அனுமதி பெற்று பல பயங்கரவாத அமைப்புகள், பயங்கரவாதிகள் பாகிஸ்தானின் ஆதரவோடு, சுதந்திரமாகத் தொடர்ந்து செயல்படுகின்றனர். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அளித்த அறிக்கையை நினைவு கூர விரும்புகிறோம். அதாவது, ஐ.நா பொதுச் சபையில் இம்ரான் பேசியபோது, பாகிஸ்தானுக்குள் 40,000-50,000 பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதை ஒப்புக் கொண்டார் என்பதை மறுக்க முடியுமா ?
பாகிஸ்தானில் சிறுபான்மையினரின் மக்கள் தொகை 1947 முதல் தற்போது நாட்டில் வெறும் மூன்று விழுக்காடு வரை எவ்வாறு வீழ்ச்சியடைந்துள்ளது என்பதை நினைவூட்டவும் இந்திய அரசு விரும்புகிறது" என அவர் குறிப்பிட்டார்.