சர்வதேச ராணுவ மற்றும் தொழில்நுட்ப மன்றம் ராணுவம் 2020 என்ற நிகழ்ச்சி ரஷ்யா தலைநகரம் மாஸ்கோவில் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வு ஆகஸ்ட் 23 முதல் 29ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இதில், 70 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர். கோவிட்- 19 தொற்று அச்சத்தால் பல நாடுகளின் பிரதிநிதிகள் இந்நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை.
ரஷ்யாவுக்கான இந்தியத் தூதர் டி.பி. வெங்கடேஷ் வர்மா, பாதுகாப்பு உற்பத்தி செயலர் ராஜ்குமார் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். மேலும், அங்கு இந்தியாவுக்கான அரங்கையும் அவர்கள் திறந்துவைத்துள்ளனர்.
வெங்கடேஷ் வர்மா, ராஜ்குமார் ஆகியோர் நிகழ்வில் கலந்துகொண்டு இந்தியாவுக்கான அரங்கை திறந்துவைத்தாகவும், மற்ற அரங்குகளைப் பார்வையிட்டதாகவும் ரஷ்யாவுக்கான இந்தியத் தூதரகம் ட்வீட் செய்துள்ளது.
ராணுவம் 2020 நிகழ்வில், 730க்கும் மேற்பட்ட ரஷ்ய ஆயுதங்கள், உபகரணங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஆயுதங்கள், ராணுவ உபகரணங்களை வடிவமைத்தல், உற்பத்தி செய்தல் மற்றும் இயங்குதல் ஆகியவற்றில் முப்பரிணாம தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது குறித்து உலகளாவிய ராணுவ அலுவலர்கள், ஆராய்ச்சியாளர்கள், பாதுகாப்புத்துறை வல்லுநர்கள் மத்தியில் இந்த மன்றம் கலந்துரையாடலை நடத்தவுள்ளது.
இதையும் படிங்க: 'கரோனாவுக்கு மீண்டும் மருந்து' - புதிய தடுப்பூசி சோதனையிலும் வெற்றி கண்ட ரஷ்யா!