பூந்தொட்டியில் வளரும் தாவரங்கள் தனிமையை உணர்வதாக விஞ்ஞானிகள் தற்போது கண்டறிந்துள்ளனர். பிரிட்டன் நாட்டில் தாவரவியல் விஞ்ஞானிகள் இதுதொடர்பாக நடத்திய ஆய்வில், ”பூந்தொட்டியில் வளரும் தாவரங்கள் நிலத்துடன் தொடர்பு இல்லாத காரணத்தினால் அவை தனிமையை உணர்கின்றன.
தாவரங்கள் சிம்பியாசிஸ் முறைப்படி நிலத்திலுள்ள பூஞ்சைகளை தனது வேர்கள் மூலம் தொடர்பு கொள்ளும். தாவரங்கள் தங்கள் வேர்கள் மூலம் மற்ற தாவரங்களைத் தொடர்புகொள்வது அரிதான ஒன்றே. அதேவேளை நிலத்தில் வளரும் தாவரங்கள் கார்பன், நீர் உள்ளிட்ட தனிமங்களை மற்ற தாவரங்களுடன் பகிர்ந்து கொள்ளும். பூந்தொட்டியில் வளரும் தாவரங்கள் இதுபோன்ற பகிர்தல் உள்ளிட்ட தொடர்புச் செயல்களை செய்வதில்லை என்ற காரணத்தினால் அவை தனிமையை உணர்வதாக ஆய்வில் முதற்கட்ட அனுமானங்கள் தெரிவித்துள்ளன.
சரியான வளர்ச்சி அடையாத மரங்களையும் தாவரங்களையும் மற்றொரு தாவரத்தின் அருகே மாற்றி வைத்து தொடர்பு படுத்தும்போது நல்ல வளர்ச்சியை அடைவது பல ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
அதேவேளை தாவரங்களுக்கு நரம்பு மண்டலம் இல்லாததால் அவற்றிற்கு தனித்துவமான உணர்வுகள் இல்லை எனத் தற்போதைய ஆய்வுகள் கூறுகின்றன. ஆய்வு தொடர்பான மேற்கண்ட விளக்கத்தை நியூசிலாந்தை சேர்ந்த செபாஸ்டின் லுசிங்கர் என்பவர் வெளியிட்டுள்ளார். தாவரங்களின் தகவல் தொடர்புமுறை குறித்து இவர் தற்போது ஆராய்ச்சி செய்து வருகிறார்.