முப்பது நாடுகளைச் சேர்ந்த அலுவலர்களுக்கிடையே சமீபத்தில் காலநிலை குறித்த கூட்டம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து ஜெர்மனியின் நிலவரம் குறித்து பேசிய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஸ்வென்ஜா ஷுல்ஸெ, முந்தைய இரண்டு ஆண்டுகால வறண்ட வானிலையும், ஒட்டுமொத்தமாக நிலவிய உயர் வெப்பநிலையும் உடனடி நடவடிக்கைகள் தேவை என்பதை உணர்த்துவதாகத் தெரிவித்தார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் நாட்டின் விவசாயம் மற்றும் காடுகள் வளர்ப்பு பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நீர்த்தேக்கங்கள் ஏற்கனவே குறைவாக உள்ளதாகவும் கவலை தெரிவித்த அவர், இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் அதிக மழை பெய்யவில்லை எனில் பயிர்கள் மொத்தமாக சேதமடையும் என்றும் கூறினார்.
மேலும் காட்டுத்தீ பரவுவதற்கான வாய்ப்புகள் இந்த ஆண்டு பல மடங்கு அதிகம் உள்ளதாகவும், மூன்றாவதாக கோடையில் ஒரு வறட்சி ஏற்பட்டால் அது பேரழிவு தரும் என்றும், ஜெர்மனியின் சுற்றுச்சூழல் மற்றும் காடுகளின் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மார்ச் 14ஆம் தேதி முதல் இன்று வரை மழைப்பொழிவு இல்லாமல் சமாளித்து வரும் ஜெர்மனியில், இந்த மாதம் போலவே நிலைமை மேலும் தொடர்ந்தால் வரலாறு காணாத வறட்சி, பஞ்சத்தைக் காண வேண்டியிருக்கும் என கவலை தெரிவிக்கிறார்கள் அந்நாட்டின் வானிலை ஆய்வாளர்கள்.
இதையும் படிங்க: கரோனாவுக்கு எதிராக அணிதிரளும் உலக நாடுகள் - "மீண்டுவருவது உறுதி" என உலக சுகாதார அமைப்பு நம்பிக்கை