இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளை உள்ளடக்கிய ஜி-20 அமைப்பின் உச்சி மாநாடு இத்தாலி தலைநகர் ரோமில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இத்தாலி தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி உள்பட ஜி-20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
மாநாடு தொடங்குவதற்கு முன்னதாக ஜி-20 அமைப்பு நாடுகளின் தலைவர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அதன்பின்னர்,கரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் பணியில் முதன்மையாக செயல்பட்ட மருத்துவர்கள், சுகாதாரப்பணியாளர்கள் உள்பட அனைத்து முன் களப்பணியாளர்களை கவுரவிக்கும் விதமாக ஜி-20 நாடுகளின் தலைவர்கள் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
மேம்பட்ட நாடுகளில் சுமார் 24 கோடி கரோனா தடுப்பூசிகள் உபரியாக இருப்பதை சுட்டிக்காட்டி, அவற்றை ஏழை நாடுகளுக்கு பகிர்ந்தளித்தால் உயிரிழப்புகளை தடுக்க முடியும் என மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. தற்போதே நடவடிக்கை எடுத்தால், சர்வதேச அளவில் நிலவும் தடுப்பூசி சமநிலையற்ற தன்மையை களையமுடியும் என தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
முன்னணி எரிசக்தி உற்பத்தியாளர்களான சவுதி அரேபியா, ரஷ்யா, ஐரோப்பா மற்றும் சீனாவில் உள்ள முக்கிய நுகர்வோர் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் ஜி-20 நிகழ்வில் பங்கேற்றுள்ளனர். எரிசக்தி பகிர்மானம், பற்றாக்குறை குறித்து இந்த நிகழ்வில் ஆலோசிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
முன்னதாக ஒபெக் நாடுகளிடம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க கோரியதை, அந்த அமைப்பைச் சார்ந்த நாடுகள் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் ஈரானின் அணுசக்தி மேம்பாட்டு திட்டங்களை குறித்து விவாதிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அணுசக்தி மூலம் ஆயுதங்கள், தளவாடங்களை அமைக்க பல கட்ட ஆய்வுகளை ஈரான் மேற்கொண்டுவருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஜி20 மாநாடு - பிரதமர் மோடியை வரவேற்ற இத்தாலி பிரதமர்