ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற ஆப்பிரிக்க அமெரிக்கர் படுகொலை செய்யப்பட்டதற்கு நீதி கோரி அமெரிக்காவில் வெடித்த நிறவெறிக்கு எதிரான போராட்டம், தற்போது பிரேசில், கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா என பல உலக நாடுகளிலும் காட்டுத் தீ போல் பரவி வருகிறது.
இந்தப் போராட்டங்களில், அடிமைத் தொழிலில் ஈடுபட்டு வந்தவர்கள், இனப் படுகொலையில் தொடர்புடையவர்கள், காலனியாதிக்கத்தின் பிரதிநிதிகளாக செயல்பட்டவர்களின் சிலைகள் சூறையாடப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து காணொலி வாயிலாக மக்களிடையே உரையாற்றிய பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், "முகவரி, பெயர், நிறம் ஆகியவற்றினால் பிரான்ஸ் சமூதாயத்தில் சிலர் வெற்றி பெற முடிவில்லை என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். நிற வெறி, இன வெறி ஆகியவற்றுக்கு எதிரான நிலைபாட்டில் சமரசமே கிடையாது. எல்லாருக்கும் எல்லாம் கிடைப்பதை நாம் அனைவரும் உறுதி சேய்ய வேண்டும்.
ஆனால் இந்தக் குடியரசு, வரலாற்றிலிருந்து எவருடைய பெயரையும், தடங்களையும் அழிக்காது. சிலைகளையும் நீக்காது" எனத் தெரிவித்தார்.
பிரான்ஸில் உள்ள காலனியாதிக்கவாதிகளின் சிலைகளை நீக்குமாறு தொடர்ந்து குரல்கள் எழுப்பப்பட்டு வந்த நிலையில் அதிபர் மேக்ரான் இவ்வாறு பேசியுள்ளார்.
இதையும் படிங்க : நவம்பரில் உச்சமடையுமா கரோனா பாதிப்பு? ஐசிஎம்ஆர் விளக்கம்