சீனாவின் வூஹான் நகரில் கடந்தாண்டு டிசம்பரில் பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தொற்று தற்போது அந்நாட்டில் குறைந்திருந்தாலும் மற்ற நாடுகளில் வேகமாக பரவிவருகிறது. இத்தொற்றால் இதுவரை 35,82,465 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2,51,512 பேர் உயிரிழந்துள்ளனர்.
இத்தொற்று சீனாவில் டிசம்பர் முதல் வாரத்தில் பரவியதாக கூறப்படுகிறது. இருப்பினும், சீன அரசு அதிகாரப்பூர்வமாக உலக சுகாதார அமைப்பிடம் (WHO) டிசம்பர் 31ஆம் தேதிதான் இத்தொற்று வூஹான் நகரில் பரவியதாக தெரிவித்தது. சீனாவையடுத்து இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இத்தொற்று வேகமாக பரவத் தொடங்கியது. ஆனால் அதற்கு நான்கு நாள்களுக்கு முன்னதாகவே பிரான்ஸில் இத்தொற்றால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர் கோஹேன் தெரிவித்துள்ளார்.
இதுவரை பிரான்ஸில் கடந்த ஜனவரி 24ஆம் தேதிதான் இத்தொற்று முதன்முறையாக கண்டறியப்பட்டதாக கூறப்படும் நிலையில், டிசம்பர் மாத இறுதியில் பாரிஸில் இத்தொற்றால் ஒருவர் பாதிக்கப்பட்டதாக வெளியாகியிருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுமட்டுமின்றி, சீனாவுக்கு முன்னதாக பிரான்ஸில்தான் கரோனா பரவியிருக்குமோ என்ற சந்தேகமும் தற்போது எழுந்துள்ளது.
பாரிஸைச் சேர்ந்த 43 வயது நபர் ஒருவர் இருமல், காய்ச்சல், மூச்சுத் திணறல் உள்ளிட்ட அறிகுறிகளோடு டிசம்பர் 27ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு கரோனா வைரஸ் இருப்பது தற்போது ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளதாக மருத்துவர் கோஹென் தெரிவித்துள்ளார்.
உடல்நலம் மோசமாவதற்கு முன்பு தான் வெளிநாடுகளுக்கு எங்கும் பயணிக்கவில்லை என அந்த நோயாளி தெரிவித்துள்ளார். அந்த நோயாளிக்கு கரோனா வந்ததையடுத்து அவரது இரண்டு குழந்தைகளின் உடல் நலம் சரியில்லாமல் போனது. ஆனால் அவரது மனைவியின் உடல்நலத்தில் கரோனா குறித்த எந்தவொரு அறிகுறியும் தென்படவில்லை.
அந்த நோயாளியின் மனைவி பாரிஸ் விமானநிலையத்தின் அருகே உள்ள சூப்பர் மார்கெட்டில் பணிபுரிந்துவந்தார். அப்போது அங்கு சீனாவிலிருந்து வந்த நபர்களால் அவருக்கு பரவியிருக்கலாம். அதன் மூலம் அவரது கணவருக்கு இத்தொற்று பரவியிருக்கலாம் என மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இருப்பினும் அந்த நோயாளியின் மனைவிக்கு அறிகுறி இல்லாமல் கரோனா வைரஸ் பரவியிருக்குமோ என்ற நோக்கத்தில் விசாரிக்கவுள்ளதாக கோஹென் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: வெனிசுலாவில் ஊடுருவ முயன்ற அமெரிக்கர்கள் கைது!