தொடர்ச்சியான பேரழிவுகளால், மே மாதத்தில் இந்தியாவையும் வங்கதேசத்தையும் பேரழிவிற்கு உட்படுத்திய ஆம்பன் சூறாவளி பாதிப்பு உள்பட, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவிட இந்த ஆண்டு தொடக்கத்தில் 1.8 மில்லியன் யூரோ மதிப்புள்ள உதவியை ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்திருந்தது.
இந்நிலையில், மொத்த உதவியை தற்போது 3.45 மில்லியன் யூரோக்களாக உயர்த்தியுள்ளது.
"தெற்காசியா முழுவதும் பருவமழை, குறிப்பாக இந்த ஆண்டு, பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தங்குமிடம், உடைமைகள் மற்றும் வாழ்வாதாரங்களை இழந்தவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கு நமது மனிதாபிமான கூட்டாளிகளுக்கு இந்த அவசர பங்களிப்பு உதவும்" என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆசிய மற்றும் பசிபிக் நாடுகளில் மனிதாபிமான திட்டங்களை மேற்பார்வையிடும் தஹீனி தம்மனகோடா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
"மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளில் கவனம் செலுத்துவதன் மூலம், இந்த கடினமான நேரத்தில் மக்கள் உயிர் வாழ்வதற்கு தேவையானவற்றை நாங்கள் வழங்குகிறோம், இதனால் அவர்கள் விரைவில் பழைய நிலைக்கு திரும்ப முடியும்."
இந்த வெள்ளம் சுமார் 17.5 மில்லியன் மக்களை பாதித்துள்ளது, வீடுகள், கால்நடைகள் மற்றும் விவசாய நிலங்கள் போன்ற வாழ்வாதாரங்களை அழித்து மற்றும் சாலைகள், மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகள் உள்ளிட்ட முக்கிய உள்கட்டமைப்புகளையும் அழித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய அறிக்கையின்படி, “1.65 மில்லியன் யூரோக்களில், ஒரு மில்லியன் யூரோக்கள் வங்கதேசத்தில் அவசரகால மனிதாபிமான தேவைகளை செய்வதற்காக அளிக்கப்படும், அங்கு இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு உணவு, நீர், சுகாதாரம், ஆரோக்கியம் மற்றும் அவசரகால தங்குமிடம் தேவைப்படுகிறது.
உணவு மற்றும் வாழ்வாதார உதவி, அவசர நிவாரண பொருள்கள் மற்றும் நீர் மற்றும் சுகாதார சேவைகளை வழங்க இந்தியாவில் மேலும் ஐந்து லட்சம் யூரோக்கள் பயன்படுத்தப்படும்.
இதுவரை, இந்த ஆண்டின் பருவமழை 10.9 மில்லியன் மக்களை பாதித்துள்ளது. உலகளாவிய கரோனா வைரஸ் தொற்றுநோயின் விளைவுகளைச் சமாளிக்க மக்கள் போராடும்போது, பாதிப்புகளை மேலும் அதிகரித்துள்ளது.
நேபாளத்தில், நாடு முழுவதும் பெய்த மழையின் காரணமாக நேர்ந்த நிலச்சரிவுகளை தொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்ததைத் தொடர்ந்து நீர் மற்றும் சுகாதாரம், தங்குமிடம் மற்றும் அத்தியாவசிய வீட்டு உபயோகப் பொருள்களின் தேவைக்காக ஒரு லட்சத்து 50 ஆயிரம் யூரோக்கள் பயன்படுத்தப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான உதவி நடவடிக்கைகள் (ECHO) மூலம், ஐரோப்பிய ஒன்றியம் ஒவ்வொரு ஆண்டும் மோதல்கள் மற்றும் பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட 120 மில்லியனுக்கும் அதிகமானவர்களுக்கு உதவுகிறது.
ஈடிவி பாரத்தின் கேள்விகளுக்கு மின்னஞ்சலில் அளித்த பதிலில், மூத்த ECHO அதிகாரி, உதவிக்கு நீட்டிக்கப்பட்ட தொகை, அரசு சாரா அமைப்பு (NGO) கூட்டாளர்கள் மூலமாக ஏற்கனவே அவசர உதவிக்கு பயன்படுத்தப்பட்டு, தற்போது பாதிக்கப்பட்ட பகுதிகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார்.
உலகெங்கிலும் மனிதாபிமான உதவிகளை வழங்க ECHO, 200க்கும் மேற்பட்ட கூட்டு அமைப்புகளுடன் இணைந்து செயல்படுகிறது. இந்த மனிதாபிமான கூட்டாளிகளில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சர்வதேச நிறுவனங்கள், ஐ.நா. நிறுவனங்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின் சிறப்பு நிறுவனங்கள் ஆகியவை அடங்கும்.
இந்தச் சூழலில், ஆம்பன் சூறாவளிக்குப் பின்னர் வழங்கப்பட்ட உதவியைப் பற்றி ECHO அதிகாரி “ஆம்பன் சூறாவளி நிதி மூலம், ஐரோப்பிய ஒன்றியம் உணவுப் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளை (நிபந்தனையற்ற பணப் பரிமாற்றம்) நிவர்த்தி செய்வதன் மூலமும் மேலும் குடிநீர், சுகாதாரம், ஆரோக்கியம், தங்குமிடம் மற்றும் குடியேற்றங்கள் போன்றவைகளுக்கு நிபந்தனைக்குட்பட்ட பணப் பரிமாற்றம் மூலம் 51,000க்கும் மேற்பட்ட மக்களை சென்றடைந்தது.” என்று கூறினார்.
செவ்வாயன்று அறிவிக்கப்பட்ட உதவி ஐரோப்பிய ஒன்றியத்தின் கடுமையான அவசரகால உதவி செயல்பாடு (ALERT)-ன் ஒரு பகுதியாகும்.
"கரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் அனைத்து திட்டங்களிலும் இணைக்கப்படும்" என்று ஐரோப்பிய ஒன்றிய அறிக்கை தெரிவித்துள்ளது.
பெரிய இயற்கை பேரழிவுகளால் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் அல்லது 50 விழுக்காட்டிற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு உதவிட ALERT அமைப்பு பயன்படுத்தப்படுகிறது.